International
oi-Hema Vandhana
பிரெஸ்ஸிலியா: பிரேசிலை சேர்ந்த கொத்தனார் ஒருவர், காதலித்த பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த பொருட்களையே விற்றுவிட்டார். சுமார் 2000 கி.மீ. தூரம் பயணம் செய்து அந்தப் பெண்ணை தேடிப் போனவருக்கு கடைசியில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர் இத்தனை நாளாக காதலித்த பெண் யார்? இதுகுறித்த கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் எடிமார் ரோச்சா மார்ட்டின்ஸ்… 49 வயதாகிறது.. இவர் ஒரு கொத்தனார்.. பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இம்பெரட்ரிஸ் நகரில் வசித்து வருகிறார்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை..

பிரேசில் கொத்தனாரின் காதலி
அவருக்கு துணையாக இருந்தது அவரது அம்மா மட்டும்தான். ஆனால், அவரும் இறந்துவிடவே மார்ட்டின்ஸ் தனிமையில் தவித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் சோஷியல் மீடியாவில் ஜெசிகா ஒலிவேரா என்ற பெண்ணின் வீடியோக்களை பார்த்திருக்கிறார்.
ஜெசிகா என்ற அந்தப் பெண் கிராமத்தில் பண்ணை வீட்டில் வசிப்பதாக வீடியோக்களில் சொல்லியிருக்கிறார். தன்னை விரும்பும் ஆண்கள் தன்னுடன் வந்து வாழலாம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். அப்படி வருபவர்களின் பயண செலவைக்கூட தானே ஏற்றுக்கொள்வதாகவும் ஜெசிகா சொல்லி உள்ளார்.. இந்த வீடியோக்களை பார்த்ததுமே மார்ட்டின்ஸுக்கு ஜெசிகாவுடன் வாழ வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.
ஜெசிகாவை தேடி 2000 கிமீ
ஜெசிகாவின் சோஷியல் மீடியா அக்கவுண்ட்டை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்தனர். இத்தனை பேரில், யாராவது அவரை திருமணம் செய்ய வருவதற்குள், தான் முந்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார் மார்ட்டின்ஸ்..
இதற்காக தன்னிடமிருந்த பொருட்களை விற்று, பயணத்துக்கான பணத்தைத் திரட்டியிருக்கிறார். பிறகு, அக்டோபர் 11-ம் தேதி ஜெசிகா வசிப்பதாக சொன்ன பெலோ ஹொரிசோன்டே நகருக்கு சென்றிருக்கிறார். ஆனால், அங்கு போய் விசாரித்தபோது, யாருக்கும் ஜெசிகாவை தெரியவில்லை. அவரது போட்டோவை காட்டியும் பலனில்லை.
கடைசியில் அங்கிருந்த வானொலி நிலையம் ஒன்றை அணுகி ஜெசிகாவின் போட்டோவை காட்டி அட்ரஸ் கேட்டிருக்கிறார் மார்ட்டின்ஸ். அப்போதுதான் அவர் தேடி வந்தது உண்மையான பெண் இல்லை, ஜெசிகா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஏஐ கற்பனை கதாபாத்திரமாகும்..
சொத்தையே விற்று ஏமாற்றம்
இத்தனை தூரம் பயணம் செய்து, தன்னிடம் இருந்த பொருட்களையும் விற்றுவிட்டு வந்தவருக்கு இது பெரிய அதிர்ச்சியை தந்தது.. ஜெசிகாவை பார்ப்பதற்காக சொத்தையே விற்று சென்ற மார்ட்டின்ஸுக்கு, மீண்டும் சொந்த ஊர் திரும்புவதற்குக்கூட கையில் பணம் இல்லை.. இதையடுத்து அங்குள்ள சமூக உதவி சேவையினர், அவருக்கு சாப்பாடு தந்து, தேவையான உதவிகளையும் செய்துள்ளனர்.. அத்துடன் . சொந்த ஊருக்குத் திரும்ப பஸ் சீட்டும் எடுத்து தந்துள்ளனர்.. பிறகு அக்டோபர் 15-ம் தேதி தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார்.
இந்த செய்திதான் கடந்த 3 நாட்களாகவே சோஷியல் மீடியாவிலும் பரவி இணையவாசிகளையும் அதிர வைத்தது.. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன..
யாரிடம் ஏமாந்தார் மார்ட்டின்ஸ்
அதாவது, மார்ட்டின்ஸ், 2020-ம் வருடத்திலிருந்தே ஜெசிகாவுடன் ஆன்லைனில் பேசி வந்ததாக சொல்கிறார்.. ஆனால், ஜெசிகா பெயரிலுள்ள அக்கவுண்ட்டை நிர்வகிப்பவர் இதை மறுத்துள்ளார். ஜெசிகா என்ற கேரக்டரே கடந்த வருடம்தான் உருவாக்கினோம்.. மார்ட்டின்ஸுடன் தனிப்பட்ட முறையில் ஜெசிகா பேசியதே இல்லை..
இப்படியொரு ஜெசிகா கேரக்டரை நாங்கள் உருவாக்கியதன் நோக்கம், யாரையுமே காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதற்காக கிடையாது.. அதிகமான வியூவ்ஸ் வாங்கி, பொருட்களை விளம்பரப்படுத்தி, வருமானம் ஈட்டுவதற்காகவே அந்த ஜெசிகா கேரக்டரை உருவாக்கினோம் என்று விளக்கமளித்துள்ளார். அப்படியானால், மார்ட்டின்ஸ் யாருடன் பேசினார்? என்று தெரியவில்லை.. இந்த சந்தேகமும் இப்போது முளைத்துள்ளது..
ஏற்கனவே 2 பேர்
அதேபோல. இதே போல 2 நபர்கள் ஏற்கனவே ஜெசிகா ஊருக்கு வந்து சிக்கியிருக்கிறாராம்.. கடந்த ஜூன் மாதத்தில் 72 வயது நபர் ஒருவர், ஜெசிகவை திருமணம் செய்ய சுமார் 4000 கி.மீ. பயணம் செய்து வந்துள்ளார். அவரும் மார்ட்டின்ஸ் போலவே, திரும்புவதற்கு பணம் இல்லாமல் உதவி தேடியுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் ஆல்பர்டோ டா கோஸ்டா என்ற 71 வயது நபரும் இதே நகருக்கு ஜெசிகா தேடி வந்துள்ளார்.. ஃபிளைட் டிக்கெட் மட்டும் கிட்டத்தட்ட 3000 பிரேசிலிய ரியால் செலவழித்தாராம்.. அவரும் சொந்த ஊருக்கு போக காசில்லாமல், பிறரிடம் உதவி கேட்டாராம்.. ஆனால் அவர்கள் 2 பேரும் ஜெசிகாவைதான் தேடி வந்தார்கள் என்பதை போலீசார் உறுதி செய்யவில்லை.. எனினும், இப்போது மார்ட்டின்ஸ் இங்கு வந்து சிக்கியபோதுதான், அவையெல்லாம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன..!!!