பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவும் ஆள்மாறாட்டப் பிரச்னைகள் குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார். “விரைவில் வாட்ஸ்அப்பில் சரிபார்க்கப்பட்ட யூசர்நேம்கள் (verified usernames) வரும், பின்னர் அதைப்போலவே சரிபார்க்கப்படாத போலி யூசர்நேம்களும் வரும், அது எதில் போய் முடியும் என்றால்…” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சரி, இந்த யூசர்நேம் சிஸ்டம் எப்படி வேலை செய்யும்?
பயனர்கள் தங்களுக்குப் பிடித்த, தனித்துவமான ஒரு யூசர்நேமைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இது 3 முதல் 35 எழுத்துகள் வரை இருக்கலாம். உங்களை முதன்முறையாகத் தொடர்புகொள்பவருக்கு உங்கள் யூசர்நேம் தெரிந்திருக்க வேண்டும். அதன்பிறகு, யார் உங்களைத் தொடர்புகொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த ‘யூசர்நேம் கீ’ (username key) என்ற ஒரு வசதியை செட் செய்துகொள்ளலாம்.
இந்த கீ இருந்தால் மட்டுமே முதன்முறை மெசேஜ்களை அனுப்ப முடியும். இந்த கீயை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, முதன்முறை உரையாடலின்போது உங்கள் போன் நம்பர் மற்றவருக்குத் தெரியாது.
ஒருபக்கம் பிரைவசி என்ற பெயரில் ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு வந்தாலும், மறுபக்கம் அதுவே பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் அபாயம் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் வாட்ஸ்அப் எப்படி ஒரு சரியான பேலன்ஸை கொண்டு வரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.