முதலில் படத்திற்கு இந்தத் தலைப்பை வைக்கலாம் என்று சொன்னபோது, நான் இயக்குநர் ஆகாஷிடம், ‘ஆகாஷ், இந்தத் தலைப்பு மட்டும் வேண்டாம், வேறு ஏதாவது மாற்றி வையுங்கள்’ என்றுதான் கூறினேன்.
அதற்கு முழுமையாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், அந்தத் தலைப்பை வைப்பதில் எனக்கு ஆரம்பத்தில் உடன்பாடு இல்லை. அது சரியாக இருக்குமா என்ற தயக்கம் இருந்தது. அதனால், அவர் எனக்குக் கதையைத் திரைக்கதை வடிவமாக மாற்றிக் கொடுக்கும்போதெல்லாம் வேறு ஒரு தலைப்பைப் போட்டுத்தான் தருவார்.
ஆனால், இறுதியாக ‘இக்கதைக்கு இதுதான் மிகப்பொருத்தமான தலைப்பு’ என்று அவர் விளக்கியபோது, நானும் மிகுந்த உற்சாகத்தோடு, ‘சூப்பர், இதையே பண்ணலாம்’ என்று சம்மதித்தேன்.

என் அம்மா பெரிய அளவில் எமோஷனலாகப் பேச மாட்டார். ஆனால், ‘இந்தப் படம் ஒரு நல்ல திரைப்படமாக வர வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்து கொள்’ என்று அறிவுறுத்தினார். அம்மாவின் அந்த வார்த்தை என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.
அதனால், தினமும் காலையில் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே இயக்குநர் ஆகாஷிற்கு போன் செய்து விடுவேன். ‘ஆகாஷ், இது நமக்கு மிக முக்கியமான படம். இந்த சீன் கச்சிதமாக வந்துவிடுமா? அந்த சீன் சரியாக வந்துவிடுமா?’ என்று தொடர்ந்து கேட்பேன்.
வழக்கமாக ஒரு திரைப்படத்திற்குப் போடும் உழைப்பை விட, அல்லது எடுத்துக்கொள்ளும் அக்கறையை விட, இந்தத் திரைப்படத்திற்கு எனக்குக் கூடுதல் பொறுப்பு இருந்தது.” என்றார்.