“பிளஸ் 2 முடிச்சாச்சு… அடுத்து என்ன?” – இது ஒவ்வொரு மாணவர் மற்றும் பெற்றோரின் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எதிர்காலப் பாதையைத் திட்டமிடவும் கல்வி விகடன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய வழிகாட்டி முகாம் சென்னையில் சீரோடும் சிறப்போடும் இன்று (25.04.2026) நடைபெற்றது.
அங்கு மாணவர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்குத் துறை சார்ந்த வல்லுநர்கள் அளித்த பதில்களும் இதோ!
கேள்வி 1: “ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயத்தால் பல மாணவர்கள் ஐ.ஐ.டி-யை எட்டாக்கனியாக நினைக்கிறார்கள். ஜே.இ.இ எழுதாமலேயே ஐ.ஐ.டி மெட்ராஸில் படித்துப் பட்டம் பெற ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?”
பதில்: “நிச்சயமாக! ஐ.ஐ.டி மெட்ராஸ் தற்போது BS in Data Science மற்றும் Electronic Systems ஆகிய நவீனப் படிப்புகளை வழங்குகிறது. இதற்கு ஜே.இ.இ தேவையில்லை. 12-ம் வகுப்பு முடித்த யார் வேண்டுமானாலும் (கலை, வணிகவியல் உட்பட எந்தப் பிரிவாக இருந்தாலும்) ஒரு மாத “குவாலிஃபையர்’ தேர்வின் மூலம் இதில் சேரலாம். வயது வரம்பும் கிடையாது!”

கேள்வி 2: “நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மருத்துவக் கனவு அவ்வளவுதானா? நீட் அவசியமில்லாத அதே சமயம் மருத்துவத் துறை சார்ந்த சிறந்த படிப்புகள் என்னென்ன?”
பதில்: “மருத்துவம் என்பது எம்பிபிஎஸ் மட்டும் அல்ல. நீட் தேவையில்லாத 30-க்கும் மேற்பட்ட ‘அலைடு ஹெல்த் சயின்ஸ்’ (கார்டியாக் டெக்னாலஜி, டயாலிசிஸ் போன்றவை) படிப்புகள் உள்ளன.
இவை தவிர பிசியோதெரபி மற்றும் நர்சிங் படிப்புகளும் மிகச் சிறந்த வேலைவாய்ப்பை வழங்குகின்றன. எய்ம்ஸ் போன்ற அரசு நிறுவனங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் இவற்றைத் தொடரலாம்”
கேள்வி 3: “வெளிநாட்டுக் கல்வி என்றாலே பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்களே… எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்ப மாணவர்கள் வெளிநாட்டில் இலவசமாகப் படிக்க முடியுமா?”
பதில்: “ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளின் பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
குறிப்பாக நர்சிங் படிப்பவர்களுக்கு அங்குப் படிக்கும்போதே மாதம் 50,000 ரூபாய் வரை உதவித்தொகையும் கிடைக்கும். இதற்குத் தேவைப்படுவதெல்லாம் முறையான மொழிப் பயிற்சியும் (IELTS/TOEFL) திட்டமிடலும் மட்டுமே.”