தொடர் கொலைகள்!
1942 பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களில் இவன் செய்த கொலைகளால் லண்டன் நகரமே உறைந்து போனது.
பிப்ரவரி 9, எவ்லின் ஹாமில்டன் என்பவர் லண்டனுக்கு ஒரு நாள் பயணமாக வந்திருந்தார். இரவு உணவிற்குப் பின் ஹோட்டலுக்குத் திரும்பும்போது கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டு, ஒரு வான்வழித் தாக்குதல் பதுங்கு குழியில் வீசப்பட்டார்.
பிப்ரவரி 10, எவ்லின் ஓட்லி என்ற முன்னாள் நடிகை, தனது அறையிலேயே கொடூரமாகக் கழுத்து நெரிக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பிப்ரவரி 11, மார்கரெட் புளோரன்ஸ் லோவ் என்பவர், வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் பட்டுக் காலுறையால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் உடல் சிதைக்கப்பட்டிருந்தார்.
பிப்ரவரி 12, டோரிஸ் ஜோவானெட் என்பவர் பேடிங்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

சிக்க வைத்த ஒரு சிறிய தவறு
நான்கு கொலைகள் அடுத்தடுத்து நடந்தும், கொலையாளி யார் என்ற சிறு தடயம் கூட இல்லாமல் காவல்துறை திணறியது. அன்றைய பத்திரிகைகள் அனைத்தும் “பிளாக்-அவுட் கொலையாளி நடமாடுகிறான்” எனத் தலைப்புச் செய்திகள் வெளியிட்டு மக்களை எச்சரித்தன. ஆனால், குற்றவாளி எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சிறிய தடயத்தை விட்டுச் செல்வான் என்பதற்கு ஏற்ப, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கம்மின்ஸ் செய்த இரு செயல்கள் அவனைக் காட்டிக் கொடுத்தன.
பிப்ரவரி 12 இரவு டோரிஸைக் கொன்ற கையோடு, கேத்தரின் என்ற பெண்ணையும் தாக்க முயன்றான். ஆனால், அவள் பலமாகக் கத்திப் போராடவே, பயந்து போன கம்மின்ஸ் அங்கிருந்து தப்பியோடினான். அவசரத்தில் தனது இடுப்பு பெல்ட்டை அங்கேயே விட்டுச் சென்றான். பிப்ரவரி 14 இரவு, வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள ஒரு இருண்ட வாசலில் கிரெட்டா ஹேவுட் என்ற பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியே வந்த ஒரு டெலிவரி பையன் சத்தம் கேட்டு டார்ச் லைட்டை அடித்தான். மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றத்தில் கம்மின்ஸ் ஓடிவிட்டான். அந்தப் பதற்றத்தில் கம்மின்ஸ் அங்கேயே விட்டுச் சென்ற விமானப்படை கேஸ் மாஸ்க் பை தான் மொத்த வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்தப் பையில் அவனது விமானப்படை அடையாள எண்ணான “525987” பொறிக்கப்பட்டிருந்தது!