கன்னியாகுமரி சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: காவலர் கைது; விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்; என்ன நடந்தது?

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன், கடந்த 25-ம் தேதி தன் பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தன் மாமா வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாமா தனக்குத் தெரிந்த வேலப்பன் (35) என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளார். மதுபோதை அதிகமானதால் குமரேசன் சிறிது நேரத்திலேயே அங்கேயே படுத்து உறங்கிவிட்டார்.

ஆனால், போதையில் இருந்த வேலப்பன், தன் அருகில் பேசிக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார். அதோடு நிறுத்தாமல், சிறுவனிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.

விஜய் / அமைச்சரவை
விஜய் / அமைச்சரவை

கடும் அதிர்ச்சியடைந்த சிறுவன் அருகில் இருந்த டிவியின் ரிமோட்டை எடுத்து வேலப்பனின் தலையில் பலமாக அடித்துவிட்டு, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று புகார் அளித்திருக்கிறார்.

காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயத்துடன் இருந்த வேலப்பனையும் போதையில் தூங்கிக் கொண்டிருந்த குமரேசனையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் வேலப்பன், அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருவதும், வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும், அரசியலமைப்புச் சட்டம் 311-ன் கீழ் அவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி
உதயநிதி

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனைக் கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.

Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்தச் சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையிலதான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு. இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.

கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி. இந்த SofaModel ஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல. ஆட்சியைக் காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை , மிகுந்த அச்சமூட்டுகிறது. தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களே – எந்தக் குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர்.

இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? “சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது.

அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்கான கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது. வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்தக் கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியைக் கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் எனப பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்” என விமர்சித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *