இதுதான் மக்களை மதிக்கும் ஆட்சியின் இலட்சணமா?
அதைவிடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவரை தொலைபேசியில் அழைத்து, “கிராமத்திற்கு ஒருவர் வந்தால் போதும்” என்று கூறியதாக மீனவர் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு கடுமையானது! ஒரு கிராமத்தின் சார்பாக யார் பேச வேண்டும் என்பதை அந்தக் கிராம மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர, அதிகாரிகள் எப்படி முடிவுசெய்யலாம்? போராடும் சங்கப் பிரதிநிதிகளை அழைக்காமல் நடத்தப்படும் கூட்டத்தில் யாருடைய கருத்தைக் கேட்கப் போகிறீர்கள்?
அரசுக்குச் சாதகமானவர்களை மட்டும் அழைத்துக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழும் அளவிற்கு நடந்துகொண்டது ஏன்? மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான கூட்டமா இது? அல்லது மக்கள் ஏற்றுக்கொண்டதாகக் கணக்குக் காட்டுவதற்கான ஏற்பாடா?
12 கிராமங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுக்க வேண்டுமென்று மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கடிதம் கொடுத்த பின்னரே கூட்டம் நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி தெரிவிக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கும் அழைப்புக் கடிதம் வரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான முறையான அழைப்பைக்கூட மக்கள் போராடித்தான் பெற வேண்டுமா? இதுதான் மக்களை மதிக்கும் ஆட்சியின் இலட்சணமா?

ஏன் இவ்வளவு பிடிவாதம்?
“கருத்துக்கேட்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; எங்கள் கருத்துகளை வலுவாக எடுத்துவைப்போம்; அந்த இடம் மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்பதை ஆதாரங்களோடு தெரிவிப்போம்” என்று மீனவப் பிரதிநிதிகள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். இவ்வளவு பொறுப்புடன் பேசும் மக்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?
கடலை நம்பி வாழும் மக்களுக்குக் குடியிருப்பும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் வாழ்விடத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவது கொடுமையானது. புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், போக்குவரத்து நெரிசல், கடலுக்குச் சென்று திரும்புவதிலான இடையூறுகள் குறித்த அச்சங்களுக்கு என்ன பதில்? தங்கள் சொந்த மண்ணிலேயே உரிமைகளை இழந்துவிடுவோமோ என்று மக்கள் அஞ்சும் நிலையை ஏன் உருவாக்குகிறீர்கள்?
தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வேறு இடமே இல்லையா? மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்று மக்கள் ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில், அந்த இடத்தில்தான் கட்டுவோம் என்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதம்? வாக்குக் கேட்கும்போது தேவைப்பட்ட மீனவ மக்களின் குரல், ஆட்சிக்கு வந்த பிறகு கேட்கவில்லையா?
எனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தையும் அதற்கான தொடர் நடவடிக்கைகளையும் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். 12 மீனவ கிராமங்களுக்கும், அக்கிராம மக்கள் தேர்வுசெய்யும் பிரதிநிதிகளுக்கும், போராடிவரும் மீனவர் சங்கங்களுக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு விடுத்து, வெளிப்படையாகக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். மக்கள் முன்வைக்கும் கருத்துகளையும் ஆவணங்களையும் முழுமையாகப் பதிவுசெய்து, அவற்றிற்கு அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.
மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்ற அவர்களின் கோரிக்கையையும் ஆதாரங்களையும் உரிய முறையில் பரிசீலித்து, அம்மக்களின் குடியிருப்பு உரிமையையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.