இங்கே, மாசி முதல் சித்திரை மாதம் வரையிலான காலத்தில், இடைப்பட்ட ஏதோவொரு 22 நாள்களில் திருவிழா நடக்கும். அதுவும் கோயிலில் பல்லி சகுனம் கொடுத்தால் மட்டுமே திருவிழா. மாசி 15-ம் தேதிக்கு மேல், சித்திரை மாதம் கடைசி வரையிலுமான காலத்தில்… வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும், காலையில் 5 முதல் 6:30 மணி வரைக்கும், மாலையில் 5 முதல் 7 மணி வரைக்கும் சகுனம் பார்க்கிறார்கள்.
சகுனம் கிடைக்கவில்லை என்றால், அந்த வருடம் திருவிழா கிடையாது. அப்படிச் சகுனம் கிடைக்காமல், பத்து வருடங்கள் தொடர்ச்சியாக திருவிழா நடத்தாமல் இருந்ததும் உண்டு.
திருவிழா தொடர்ச்சியாக நடக்காமல் இருக்கும் காலத்தில், சாமி குறி கேட்டு, ஸ்ரீங்கம் அம்மா மடத்துக்குப் போய் காவிரி தீர்த்தத்தை எடுத்து வந்து, கோயில் பிராகாரத்தில் தெளிக்கிறார்கள்.
மாறாக, திருவிழா நடத்த சகுனம் கிடைத்துவிட்டால், ஞாயிற்றுக் கிழமை காப்புக் கட்டித் திருவிழாவைத் தொடங்கி அதிலிருந்து 22 நாள்கள் களைகட்டும்.

18-ம் நாள் மண்டகப்படியின்போது, கோயிலுக்கு முன்பு உள்ள நான்கு கல் கால்களில், தேர்ச் சட்டம் தூக்கிப்போடும் நிகழ்வும் நடைபெறும். அதாவது, தேர் போன்ற அமைப்புக்கான மரச்சட்டங்களை இணைத்துத் தேராக்கி, அதைத் தூக்கி அந்த நான்கு கல் கால்களிலும் பொருத்துவார்கள்.
அந்த வைபவத்துக்குப் பிறகு, பக்தர்கள் அந்த நான்கு கல் கால்களிலும் மண் அள்ளிப் போட்டு வேண்டிக்கொள்வார்கள். அப்படி வேண்டிக்கொண்டால், அவர்களின் பேசாத குழந்தைகளுக்கு அம்மன் பேசும் வரத்தை வழங்குவாள் என்பது நம்பிக்கை. திருவிழா முடியும்வரை இப்படி மண் அள்ளிப் போட்டு வேண்டிக்கொள்வார்கள்.
திருவிழா முடிந்த அடுத்த 8-ம் நாள் இந்தத் தேர்ச்சட்டத்தைச் கழற்றி எடுத்துவிடுவர். 21-ம் நாளன்று காலையில் காளப்பனுர் பெண்கள் பானைகள் வைத்துப் பொங்கலிட்டு, அம்மனுக்குப் படைப்பார்கள். 22-ம் நாளன்று காலையில் இருந்து, மற்ற நான்கு ஊர் மக்களும் பொங்கல் வைத்துப் படையல் போடுவார்கள்.