`லில்லி எனும் புதையலில் கிடைத்த கில்லி' | உளவன் 06

Spread the love

“ஏஜெண்ட் பெயர் என்ன?” 

ஜெர்மனியிலிருந்து உடுருவும் அப்வேர் உளவாளியை கொத்தித் தூக்கக் காத்திருந்தனர். MI5-க்கு கிடைக்கும் இன்னொரு துருப்புச் சீட்டு.

“அவர் Codename Tramp, அதாவது நாடோடி…” சொல்லிவிட்டு சிரித்த ஓர் அதிகாரி, “அவர தூக்கப் போறோமா?” என கேட்டார். அப்வேர் உளவாளி ஊடுருவ இருக்கும் தகவலை, பிரிட்டனின் குறியீட்டு உடைப்பு அணி மோப்பம் பிடித்துவிட்டது. 1944-ம் ஆண்டின் மார்ச் மாத தொடக்கத்தில் லண்டன் வீதிகளில் பனிச் சாரல் பொழிந்து கொண்டிருக்க, MI5 அலுவலகத்தில் விவாதம் தொடர்ந்தது. 

“இல்லை… அவரே வருகிறாராம். டபுள் ஏஜெண்டாக வேலை செய்ய விரும்புகிறாராம்.”

காத்திருந்தனர். வந்தவரைப் பார்த்ததும் MI5 அதிகாரிகளுக்கு ஆச்சரியம். பெயர் லில்லி செர்குயிவ் (Lily Sergueiew). 30-களின் தொடக்கம். வசீகரிக்கும் தோற்றம். ஃபிரெஞ்சுக் குடிமகள். ரஷ்ய பூர்வீகம். ஜார் மன்னராட்சி காலத்தில், அன்றைய தலைநகர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர். ஜார் ஆட்சியில் இவரின் உறவினர்கள் ராணுவத்திலும் உயர் பதவியிலும் இருந்தனர். 

போல்ஷ்விக் புரட்சிக்குப் பின் ரஷ்யாவில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுடன் ராணுவத்துக்கு உரசல் ஏற்பட்டது. இவர் குடும்பம் ரஷ்யாவை விட்டு வெளியேறியது. சிறுவயதிலேயே ஃபிரான்சில் குடியேறியதால் லில்லி பாரிஸ் நகரவாசியானார்.

பூர்வீக தேசத்தின் சாயல் லில்லியின் தேகத்தில் கொஞ்சமுமில்லை. முழுக்க முழுக்க ஃபிரான்ஸின் சுதந்திரக் குடிமகளாகவே வளர்ந்திருக்கிறார். ஃபிரெஞ்சின் வாழ்க்கை முறை; ஃபிரெஞ்சின் கலாச்சார வண்ணம்; ஃபிரெஞ்சின் விடுதலை வேட்கை. லில்லியிடம் பிரதிபலித்தது இதுவே. 

“அப்வேரின் உளவாளி நீங்கள். திடீரென பிரிட்டனுக்காக உளவுப் பணியில் சேர என்ன காரணம்?” 

“ஜெர்மனியின் அதட்டலுக்குப் பயந்து, ஃபிரெஞ்சு அரசாங்கம் அடங்கிப் போய் ஏதோ ஒரு காகிதத்தில் கையெழுத்து போட்டிருக்கலாம். அதுக்கு சமாதான ஒப்பந்தம் என்றோ, வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் தங்கள் தேசத்திற்காக போராட விரும்புவோர், போராட தயாராக இருப்பவர்கள், மனவுறுதி உள்ளவர்கள், களம் காண வாய்ப்பு கிடைக்காதவர்கள் – இவர்களெல்லாம் ஆயுதங்களைக் கீழே போட வேண்டுமென எந்தக் கட்டாயமுமில்லையே…”

படபடவென பொறிந்து தள்ளினார் லில்லி. MI5 அதிகாரி கென்னத் பென்டன் (Kenneth Benton) கேட்ட கேள்விக்கு அவரின் பதில் பூடகமாக இருந்தது.

“நல்லது. நீங்க என்ன விதமா…?” கேள்வியின் முழுமையை லில்லி புரிந்து கொள்வாரென பென்டன் நம்பினார். 

“அதுக்காகத்தான் அப்வேரில் இணைந்தேன். இரண்டரை ஆண்டுகள் அங்கு பயிற்சி எடுத்தேன். இப்போது அவர்களின் ஆயுதத்தை எடுத்து அவர்களோடு சண்டை போடப் போகிறேன்.”

சுருக்கமாகப் பதிலளித்தார். பென்டன் புரிந்து கொள்வார் என லில்லி நம்பினார். MI5 அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அப்வேருக்காக பிரிட்டனை இவர் உளவு பார்க்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? 

பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார் லில்லி.

இளமைப் பருவத்தில் சுதந்திரப் பறவையைப் போல ஐரோப்பாவை வட்டமடித்திருக்கிறார். படிப்பை விட கலையில் அதீத ஈடுபாடு. ஓவியக் கலையை முறைப்படி கற்றார். விட்டேத்தியாக உலகைச் சுற்றி வருவதில் கொள்ளைப் பிரியம். தலைநகர் பாரிஸ் முதல் போலந்து தலைநகர் வார்ஸா வரை 1500 கிலோ மீட்டரை நடந்தே கடந்திருக்கிறார். ஐரோப்பிய நாடுகளின் தலைநகர்களுக்கு சைக்கிளிலேயே வலம் வந்திருக்கிறார். சுமார் 6000 கிலோ மீட்டர் மிதிவண்டியில் கடந்த சாகசக்காரி. 

பயணத்தில் அனுபவித்த சுவாரஸ்யங்களையெல்லாம் அவ்வப்போது பத்திரிகையில் எழுதி இருக்கிறார். லில்லி தொழில்முறை பத்திரிகையாளராகவும் இருந்திருக்கிறார். குறிப்பாக புலனாய்வு செய்திகளில் தீவிர ஆர்வம்.

பல்வேறு கலாச்சார மக்களிடம் பழகிய பட்டறிவு லில்லிக்கு பலம். ரஷ்ய, ஃபிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், செர்பியன் மொழிகளில் பேசும் திறன் கூடுதல் பலம். இவ்வளவு செழிப்பான அனுபவங்களால் ஆளுமைமிக்கவராகத் தோன்றினார்.

லில்லியின் பக்குவமான பேச்சும் முதிர்ந்த பார்வையும் சற்று  நம்பிக்கையளித்தன. இருப்பினும், ஐயத்தைப் போக்கிக் கொள்ள பென்டன் உரையாடலைத் தொடர்ந்தார்.

“அப்வேரில் எப்படி, எப்போது சேர்ந்தீங்க…” 

“போர் தொடங்கிடுச்சி. ஏதாவது செய்தாக வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து குறுகிய காலப் பயிற்சி ஒன்றில் சேர்ந்தேன். செவிலியராக மாறினேன். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்தேன்.

ஆனால், ஃபிரான்ஸ் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு, செவிலியர் பணி மட்டும் போதாது என்பதை உணர்ந்தேன். ஏதாவதொரு வகையில் நாஜிக்களுக்கு எதிராக நேரடியாக போரில் ஈடுபடணும். தீவிரமாக யோசித்தேன். அப்போதுதான் பெர்லினில் பணியாற்றும் ஃபெலிக்ஸ் டஸ்ஸல் (Felix Dussel) நினைவுக்கு வந்தார்.”

“டஸ்ஸல், அப்வேர் உளவுத்துறை அதிகாரியா?” லில்லி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டார் பென்டன்.

“இல்லை. நான் பெர்லினில் சைக்கிள் சுற்றுப் பயணம் போன போது அறிமுகமான பத்திரிகையாளர். எனக்கு அவர் நல்ல பழக்கம். அப்வேர் அதிகாரிகளோடு அவருக்கு நல்ல பழக்கம். அதனால அவர் மூலமா அப்வேரில் சேர முயன்றேன். நாற்பத்தி ஒன்று தொடக்கத்தில்… ஆமாம், ஜனவரி மத்தியில் பெர்லினில் ஒரு அப்வேர் அதிகாரியைச் சந்தித்தேன். அப்போதே அப்வேரில் இணைந்துவிட்டேன். ரகசிய மையை வைத்து தகவல்களை பறிமாறுவதை அந்த நபர் கற்றுக் கொடுத்தார். அடுத்து பாரிஸ் திரும்பினேன். அங்கு எனக்கு ஒரு ரிப்போர்ட்டிங் ஆஃபிஸர் இருந்தார்.”

“உடனே சேர்த்திட்டாங்களா?” ஆச்சரியத்தோடு பென்டன் மீண்டும் குறுக்கிட்டார்.

“ஆமாம். அவர்களுக்கு ஃப்ரெஞ் தெரிந்த நபர் தேவைப்பட்டிருக்க வேண்டும். ஐரோப்பாவில் எந்த நாட்டுக்கும் போக நான் ஆர்வமா இருந்தேன். அதனால உடனே சேர்த்திட்டாங்க. பாரிஸிலும் பெர்லினிலும் மாறி மாறி எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் பயிற்சி. மோர்ஸ் குறியீடு தகவல் பரிமாற்றத்தை முழுமையாக கற்றுக் கொண்டேன். ரேடியோ டிரான்ஸ்மிட்டர ஆபரேட் பண்ண கற்றுக் கொண்டேன்.

பிரிட்டிஷ், அமெரிக்க புவியியல் அமைப்பை கற்றுத் தந்தனர். பிரிட்டிஷ், அமெரிக்க ராணுவத்தில் படைப் பிரிவுகளை அடையாளம் காண, பதவி அடிப்படையிலான சீருடைகளை அடையாளம் காண, விமானங்களை அடையாளம் காண பயிற்சி தந்தனர்.”

இதுவரை லில்லி சொல்லிய தகவல்கள் பொதுவான தகவல்கள். எந்த உளவு அமைப்பிலும் இந்தப் பயிற்சிகள்தான் வழங்கப்படும். பென்டனுக்கு திருப்தியளிக்கவில்லை. லில்லி திறமையாக நடிக்கிறார். அவரை MI5-ல் இணைத்துக் கொள்வது ஆபத்து. திட்டவட்டமாக முடிவெடுத்தார் பென்டன்.

“வேறு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமா?” லில்லியே கேட்கவும் பென்டன் வேண்டா வெறுப்பாக தலையசைத்தார். 

“ஸ்பெயின் வந்து பிரிட்டனுக்குள்ள வருவதற்கு காலதாமதமாகி விட்டது. பிரிட்டனுக்குள் நான் வந்ததும் சில முக்கியமான தகவல்களை அப்வேருக்கு அனுப்ப வேண்டும். அது ஒரு தாளில் குறிக்கப்பட்டிருந்தது. அதைப் படிக்கத் தந்தனர். உடனே பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அந்தத் தாளில் இருந்ததை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என கட்டளை. இப்படி நினைவில் வைத்துக் கொள்வதற்கும் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.”

அந்தத் தகவல்களை லில்லி சொல்வாரா? அல்லது தாவி விடுவாரா? பென்டன் மனம் குறுகுறுத்தது. எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார். லில்லி தொடர்ந்தார்.

“பிரிட்டனுக்குள் வர தாமதமாவது போல் தெரிந்தது. மறந்து போகலாம். அதனால் ஒரு வேலை செய்தேன். அந்தத் தகவல்களை ஒரு தாளில் எலுமிச்சைச் சாறால் எழுதினேன். வெற்றுத் தாள் போலவே தெரியும். யாருக்கும் சந்தேகம் வராது. விமான உற்பத்தித் தளங்கள், கடற்படை தளங்கள் பற்றிய தகவல்களை அனுப்ப சொல்லி இருந்தனர். இதில், ரகசிய மை உள்ள புட்டியை எடுங்க…” கைப்பையில் இருந்த ஒப்பனைப் பெட்டியை எடுத்து பென்டனிடம் நீட்டினார். வாங்கிய ஒரு அதிகாரி ரகசிய மை புட்டியைத் தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை. 

லில்லி அதை எடுத்து பென்டனிடம் கொடுத்துக் கொண்டே, “இன்னொரு முக்கியமன விஷயம். ரசாயன வாயுக்களை பிரிட்டன் போரில் பயன்படுத்தப் போகிறதா என்ற தகவலை அனுப்பச் சொல்லியும் அறிவுறுத்தி இருந்தனர்.” என கூறினார்.

கடைசி தகவலைக் கேட்டதும் பென்டனுக்கு உற்சாகம் தாளவில்லை. பிரிட்டனை உளவு பார்க்க வந்தவராக இருந்தால் இந்தத் தகவல்களைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. லில்லி மேல் அதுவரை இருந்த அபிப்ராயத்தை அப்படியே மாற்றிக் கொண்டார். உண்மையிலேயே நாஜிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்தான் லில்லி என்பது ஊர்ஜிதமானது. 

தான் பார்த்தவர்களை மனதில் பதிந்து கொண்டு, மீட்டிப் பார்த்து அப்படியே காகிதத்தில் வரையும் நுட்பமான ஓவியர் லில்லி. பெர்லினில் தனக்கு பயிற்சி அளித்தவர், சந்தித்த உளவாளிகள், அதிகாரிகளை வரைந்தார். MI5 அதிகாரிகளை ஆச்சரியத்தில் உறைந்தனர். 

ஃபிரான்ஸ் தேசத்தை அடிமைப்படுத்த முயன்ற நாஜிக்களை பழிவாங்க லில்லி செய்த காரியம் அசாதாரணமானது. அச்சம் கொள்ளாமல் அப்வேரில் இணைந்தார். ஒற்றெடுக்க அவர்களிடமே பயிற்சி பெற்றார். அவர்களையே கருவறுக்க இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் பொறுமையாக காத்திருந்தார். இப்போது பிரிட்டன் உளவுத்துறையில் இணைய வந்திருக்கிறார். இது அனைத்தையுமே லில்லி திட்டமிட்டே செய்திருக்கிறார். லில்லியை MI5-ல் இணைத்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தனர். அவருக்கு புதிய Codename வழங்கப்பட்டது. Treasure. பெயருக்கேற்றார் போல புதையல் – பொக்கிஷம் அவர். 

நாஜிக்கள் போரில் நச்சு வாயுவை பயன்படுத்தலாம். நேச நாடுகளின் கூட்டணி அஞ்சியது.

லில்லி மூலம் உடனே தகவல் அனுப்பினர்:

‘MI5-ல் சமர்த்தாக ஊடுருவிவிட்டேன். எந்தச் சிக்கலும் இல்லை. பிரிட்டனிடம் நச்சு வாயுவை பயன்படுத்தும் திட்டமில்லை. நாஜிக்கள் பயன்படுத்தினால், பிரிட்டன் விமானப் படை நச்சு வாயு மூலம் மிக மோசமாக பதிலடி கொடுக்கவும் தயாராக உள்ளது.’ 

இது Tramp அனுப்பிய தகவல். பிரிட்டனுக்கு அவர் ‘பொக்கிஷமாக’ இருந்தாலும், ஜெர்மனிக்கு அவர் ‘நாடோடி’தானே.

பிரிட்டனின் விமானப் படை மீது ஜெர்மனிக்கு பயங்கர அச்சமிருந்தது. லில்லியின் தகவலால் நச்சு வாயுவை பயன்படுத்த அது நிச்சயம் தயங்கும். நாஜிக்கள் நச்சு வாயுவைப் பயன்படுத்துவதை லில்லி தடுத்தது போரின் மிகப் பெரிய வெற்றி.

பிரிட்டனில் இருந்து உளவு பார்த்த லில்லியை அப்வேர் அதிகாரிகள் கண்ணை மூடிக் கொண்டு நம்பினர். MI5-ம் இதைத்தான் எதிர்பார்த்தது. மற்ற இரட்டை உளவாளிகளைப் போல லில்லியும் Operation Fortitude-ல் ஏராளமான பொய்த் தகவல்களை அனுப்பினார். இரண்டாம் உலகப் போரின் போக்கை மாற்றிய எடி சேப்மேன், கார்போ போல MI5-ன் நம்பிக்கைக்குரிய இரட்டை உளவாளிகளின் பட்டியலில் லில்லியும் இணைந்தார்.  

(உளவு தொடரும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *