புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில் : அஷ்டமா ஸித்திகளையும் அருளும் தலம்! | history of pudhukkottai viralimalai murugan temple

Spread the love

மலை அடிவாரத்தில் நீராழி மண்டபம் கொண்ட சரவணப்பொய்கை உள்ளது. அதன் கிழக்கே மைக்கண்ணுடைய அம்மன் கோயில் உள்ளது. 207 படிகள் மலையேறினால் முருகனைத் தரிசிக்க முடியும். வாகனங்கள் நேரடியாகச் செல்ல தார்ச்சாலையும் உள்ளது.

மலை உச்சிக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஒரு சிறிய குகை சந்நிதி உள்ளது. மலைமீது சந்தான கோட்ட மண்டபம், சண்முக மூர்த்தி மண்டபம், நவராத்திரி மண்டபம் உள்ளன. ஆலயத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அருணகிரிநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர் சந்நிதிகளும் உள்ளன. தவிர நவகிரக சந்நிதி, நடராஜர்-சிவகாமி, மாணிக்க விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் சந்நிதியும், அநேக உற்சவ திருமேனிகளும் உள்ளன.

விராலிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில்

விராலிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில்

இத்தலத்தின் தீர்த்தம், நாக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் காசி வில்வம். மேலும் இந்த ஆலயத்தின் புராணச் சிறப்பாகப் பல கதைகளும் இங்குள்ளன. சனகர், சனந்தர், சனாதனர், சனக்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் அருள் தந்த திருத்தலம். வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் சாபம் நீங்க இங்கு தவமிருந்தனர்.

பிரம்மனின் சிரத்தைக் கொய்த ஈசனை நாரதர் கண்டித்ததால் உண்டான சிவநிந்தனை சாபம் நீங்க, இங்குள்ள முருகனை வணங்கி பலன் பெற்றார் எனப்படுகிறது. விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இங்கேயே இயற்றினார். திருவாரூர் தட்சிணாமூர்த்தி என்ற அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த திருத்தலம் என நீள்கிறது புராணத் தகவல்கள்.

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் உடனே பலன் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. அப்படி பிள்ளை பிறந்தால் அக்குழந்தையை இங்கு கொண்டு வந்து முருகப்பெருமானிடம் ஒப்படைத்து விடுவார்கள். பிறகு வழிபாடுகள் முடித்து தவிடு விலையாகக் கொடுத்து அதற்குப் பதிலாக அந்தக் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்கிறார்கள்.

வேண்டியவருக்கு வேண்டியவை கொடுத்தும், தீராத வினைகளையும் தீர்த்து ஒவ்வொருவரின் வீட்டிலும் பல அற்புதங்களை நடத்தி வருகிறான் விராலிமலை சண்முகன். தெற்கு குடகு சாமி, பகடைச்சாமி, ஆறுமுகச்சாமி போன்ற சித்தர்கள் வசித்த இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். நிம்மதியும் நிறைவும் அடையலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *