அதற்கு மறுநாள் பள்ளிக்கு வந்த ரேஷ்மாவிடம், `டியூஷன் வரவில்லை என்றால் உன்னை ஃபெயிலாக்கிவிடுவேன். இண்டர்னல் மார்க் போடமாட்டேன்” என்று ஜார்ஜ் மிரட்டியதால், அன்று மாலை டியூஷனுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, `இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதற்கு ஏன் பயப்படுற? நீ நல்லா படிக்கனும்னுதானே நான் இலவசமா டியூஷன் எடுக்கறேன்.
உனக்கு நான் கெடுதல் பண்ணுவேனா?’ என்று சமாதானமாகப் பேசியிருக்கிறான் ஜார்ஜ். ஆனால் அதை ஏற்க மறுத்த ரேஷ்மா, வீட்டுக்குப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான், கடந்த முறை இவன் செய்த பாலியல் சீண்டலை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், அதைக் காட்டி `நீதான் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டனு சொல்லி பள்ளியை விட்டே அனுப்பி விடுவேன்’ என்றும் மிரட்டியதால் பயந்து போயிருக்கிறார் ரேஷ்மா. அதையடுத்துதான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் ஜார்ஜ்.

அதற்குப் பிறகு நான்கைந்து நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போய் வீட்டில் இருந்த ரேஷ்மா, டியூஷனுக்குப் போக மாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அனைத்துக் குழந்தைகளும் வழக்கமாகச் சொல்வதுதான் என்று நினைத்த அவரது பெற்றோர், எப்போதும் போல டியூஷனுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அதையடுத்து, `வீடியோவைக் காட்டி உன்னை பள்ளிக்கூடத்தை விட்டே அனுப்பிவிடுவேன்’ என்று மீண்டும் மிரட்டி, ரேஷ்மாவிடம் தொடர்ச்சியாக தன்னுடைய பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றியிருக்கிறான் ஜார்ஜ். அதனால்தான் சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதும், தன்னுடைய ஆசிரியர் செய்யும் வக்கிரங்களால் கர்ப்பமாகிவிடுவோம் என்ற புரிதல் கூட அந்தச் சிறுமிக்கு இல்லை.