இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா” மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்’ பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளை செய்துவந்த கும்பலை அண்மையில் கண்டறிந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.
தொடர்ந்து போலி மருந்து தொழிற்சாலைகள், அவற்றின் குடோன்களுக்கு சீல் வைத்ததோடு, முக்கிய குற்றவாளியான `மதுரை’ ராஜா (எ) வள்ளியப்பன், ராஜா, ராணா, மெய்யப்பன், விவேக் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.
அத்துடன் முக்கிய குற்றவாளியான ராஜா நடத்தி வந்த போலி மருந்து தொழிற்சாலைகள், குடோன்களில் சோதனை செய்து, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய இந்த வழக்கை விசாரிக்க எஸ்.பி நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (S.I.T) அமைக்கப்பட்டது.

அந்தக் குழு ராஜாவின் மனைவி ஞானப்பிரியா, அவர்களின் பங்குதாரரான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன், விருப்ப ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13 பேரை கைது செய்தது.
அதன்படி இந்த வழக்கில் 4 பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதையடுத்து வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தினர்.
அதனால் ஆளுநர் கைலாஷ்நாதனின் பரிந்துரையை ஏற்று வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது மத்திய உள்துறை அமைச்சகம். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வந்து தங்களுடைய முதல்கட்ட விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதன்பிறகு அமைதியானார்கள்.