ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர், அமராவதி நகரைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட விளை நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய விளை நிலத்திற்கான பாதையை அருகில் உள்ள மற்ற விவசாயிகள் தடுத்து நெல் சாகுபடி செய்ய முடியாமல் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி வந்துள்ளார்.

அந்த நிலத்தில் தென்னை, வாழை மற்றும் தேக்கு மரங்களை நடவு செய்து பராமரித்து வந்திருக்கிறார். காலிங்கராயன் கால்வாயில் பாசனத்திற்கான தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தென்னை, தேக்கு மற்றும் வாழை மரங்கள் நேற்று திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணிக்கம், தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுக்குள் கொண்டு வந்தாலும் மாணிக்கத்திற்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மற்ற நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் தன்னுடைய பயிர்களை தீவைத்துக் கொளுத்தியிருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.