புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார், “புதுச்சேரிக்கு வருவாய் குறைவாக இருப்பதால் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், நேயம் மக்கள் கழக எம்.எல்.ஏ நேரு உள்ளிட்டவர்கள், “புதுவைக்கு மாநில அந்தஸ்துதான் வேண்டும். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதில் மாறுபட்டிருந்தால் கோரிக்கை பலவீனமடையும்” என்றனர்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “இந்த சபையின் எதிர்ப்பை பதிவு செய்ய, சபாநாயகர் சபையை ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், “சபையை ஏன் ஒத்திவைக்க வேண்டும்? புதுவை மக்களுக்காக உங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பை காட்டுங்கள்” என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார், “நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்” என்றார்.

அப்போது அவருக்கு ஆதரவாக ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தாங்களும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறினர். அதையடுத்துப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எவ்வளவு முக்கியம் என்பதும், அவசியம் என்பதும் எனக்கு தெரியும். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயார். மாநில அந்தஸ்தை நாம் பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை. அப்படி இருந்தால்தான் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். மாநிலம் வளர்ச்சி பெற மாநில அந்தஸ்து கட்டாயம் தேவை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” என்றார்.