அன்றைக்கு குமாரின் முகத்தில் நான் பார்த்த சந்தோஷத்தை, வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அது, “ஹியரிங் ஏய்டு” மூலம் முதன்முதலாக அம்மா குரல் கேட்ட ஒரு குழந்தையின் சந்தோஷம், “அறுவை சிகிச்சைக்குப் பிறகு” பார்வை கிடைத்தவன் சந்தோஷம் போல, தனது குரலைத் தானே கேட்டு மகிழ்ந்த அந்த சந்தோஷம்……
இதைவிட பேரின்பம் என்னவென்றால், கட்டணம் ஏதும் வசூலிக்காமல் தனக்குப் பேச்சு கொடுத்த மருத்துவருக்கு பிரதிபலனாக அவருடனேயே இருந்து அவருடன் சேவை செய்ய முடிவு செய்து, மருத்துவரின் அழகர் கோவிலில் உள்ள அவரது “போதி வளாகத்தில்’ சிகிச்சை பெற்று வருபவர்களை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்று இன்றுவரை செவ்வனே செய்து வரும் குமாருக்கு, அதே வளாகத்தில்
“பால் பண்ணை” அமைத்து அதற்கு அவரை பொறுப்பாளராகவும் நியமனம் செய்துள்ளார் மருத்துவர்.
குமார் மட்டுமல்ல, பல குமார்களும், குமாரிகளும் அங்குத் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கும் தோட்டவேலை, அடுமனை வேலை என அவரவருக்குப் பிடித்த வேலைகளில் சிகிச்சையோடு பயிற்சியும் அளித்து அதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கவும் ஏற்பாடுகள் செய்கிறார் மருத்துவர்.
போதி வளாகத்தைப் பார்த்த பிறகு (2004-ல்) அங்குள்ள ‘Visitor’s Notebook’ -ல் நான் எழுதி வந்தது:
அக்கரை பச்சையை
இக்கரையில் இருந்து ரசித்தேன்.
அருகில் சென்று பார்க்க
இருகை தட்டி பரிசல்காரனை அழைத்தேன்.
அந்திமாலைப் பொழுது அது
இதமாய் வீசிய தென்றலில் நனைந்தேன்
அக்கரை இக்கரையானது.
அக்கரையில் இருந்து நான் கண்டது
இக்கரையில் வாழும் பசுமையான உள்ளம் கொண்ட
நல் இதயங்களை – என்பதை உணர்ந்தேன்.
உடலுக்கு தான் வயது
உள்ளத்துக்கு அல்ல –
உள்ளதை உள்ளபடி
ஏற்றுக்கொள்ளவும் வெளிப்படுத்தவும்
நல்ல உள்ளம் வேண்டும்.
நல்ல உள்ளங்களை இனம் கண்டு
சேவை செய்யும் நல் இதயங்களில்
‘செல்லமுத்து அறக்கட்டளையும்’ ஒன்று.
நல்ல உள்ளங்களை
நல்வழி கொண்டு செல்லும்
நல் இதயத்திற்கு
நன்றி கலந்த வணக்கங்கள்.
மருத்துவரின் சேவை இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
-இளவேணி இராசேந்திரன்