India
oi-Shyamsundar I
புனே: புனேவில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை பெண் ஒருவர் காதலுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தற்போது அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள லோஹாகாட் கோட்டையில் கேதன் அகர்வால் என்ற இளைஞர் தள்ளிவிட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது ஒரு புதிய மற்றும் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சியா கோயல், தனது நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தனது காதலனான சேத்தன் சவுத்ரியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத்தனை காலம் இவர்கள் காதலர்கள் என்று கூறப்பட்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே திருமணம் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் புனே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
புனேவைச் சேர்ந்த 25 வயதான தொழிலதிபர் கேதன் அகர்வால் மற்றும் சியா கோயல் ஆகிய இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஒரு பிரம்மாண்டமான மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஜூன் 18ம் தேதி யாரும் எதிர்பாராத ஒரு கொடூரம் நிகழ்ந்தது. லோஹாகாட் கோட்டைக்கு ட்ரெக்கிங் சென்ற கேதன் அகர்வால், அங்குள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்று கருதப்பட்டாலும், போலீசாரின் தீவிர விசாரணையில் சியா கோயல் இந்த திருமணத்தை நிறுத்த திட்டமிட்டு, தனது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் சேர்ந்து கேதனை பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்தது அம்பலமானது.
வெளிவந்த ரகசிய திருமண விவகாரம்
தற்போது இந்த கொலை வழக்கின் விசாரணையில் ஒரு முக்கிய ஆதாரமாக சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரியின் ரகசிய திருமணம் பார்க்கப்படுகிறது. அதாவது இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது பிப்ரவரி மாதம் கேதனுடன் நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்பாகவே, சியாவும் அவரது காதலன் சேத்தனும் உள்ளூர் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக புனே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளதா மற்றும் அதற்கான முறையான திருமண சான்றிதழ் ஏதேனும் இருக்கிறதா என்பதை போலீசார் தற்போது தீவிரமாக சரிபார்த்து வருகின்றனர். இந்த திருமணம் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அது வழக்கின் போக்கையே மாற்றும்.
நண்பர்களிடம் விசாரணை மற்றும் நீக்கப்பட்ட புகைப்படங்கள்
இந்த ரகசிய திருமணத்தின் போது சாட்சிகளாக கையெழுத்திட்டதாகக் கூறப்படும் சியா கோயலின் கல்லூரி நண்பர்கள் இருவரைப் பற்றியும் போலீசார் தற்போது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், சியா மற்றும் சேத்தன் இருவரும் திருமண மாலைகளை அணிந்திருப்பது போன்ற புகைப்படங்கள் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு, பின்னர் அவை நீக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அந்த நீக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டெடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கொலைத் திட்டம் அவசர அவசரமாக அரங்கேறியது ஏன்?
உதய்பூரில் நடக்கவிருந்த பிரம்மாண்ட திருமணத்திற்காக, கேதனின் குடும்பத்தினர் சியா கோயலின் ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆவணங்களை கொடுத்தால் தனது ரகசிய திருமணம் மற்றும் காதலன் பற்றிய உண்மைகள் வெளியே தெரிந்துவிடும் என்று சியா பயந்துள்ளார். இதன் காரணமாகவே, மாப்பிள்ளை கேதன் அகர்வாலை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட சியாவும் சேத்தனும் அவசர அவசரமாக இந்த கொலைத் திட்டத்தைத் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

