அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப் பள்ளி மாணவி தயங்கியதால், ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது கண்டனத்தைப் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது.
குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.