முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மூன்றாவது இடம் தரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார், “1967 க்குப் பின்பு தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க என இருதுருவ அரசியலே இருந்து வந்தது. இந்நிலையில் தான் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க-வையே பின்னுக்குத் தள்ளியது.
108 இடங்களைப் பிடித்த தவெக தேசிய ஜனநாயகக் கூட்டணியை நாடியிருந்தால் அ.தி.மு.க-வின் 47 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எளிதாகக் கிடைத்திருக்கும். மட்டுமன்றி, மத்திய அரசின் அனுகூலங்களும் கிடைத்திருக்கும்.
ஆனால் விஜய், மதச்சார்பற்ற சக்திகளோடு மட்டுமே கைகோர்க்க வேண்டும் என்பதால் காங்கிரஸ் பக்கம் நின்றார். சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆட்சி இருக்க வேண்டும் என்பதால் தான் மதசார்பற்ற சக்திகளோடு கைகோர்த்தார்.

இந்நிலையில் விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடல்களுக்குப் பின்பு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. எதிர்கட்சியினர் திட்டமிட்டு சர்ச்சையாக்கி உள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்பு மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போதும், தேசிய கீதத்திற்குப் பின்பே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இது முழுக்க ஆளுநர் மாளிகையின் நிகழ்ச்சி நிரல். அவர்கள் சுட்டிக்காட்டியபடியே நிகழ்வுகள் நடத்தமுடியும்.
1875 ஆம் ஆண்டு மேற்கு வங்கக் கவிஞர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு கடந்த ஆண்டு முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்பட்டது. மேலும், அந்த பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை கொடுக்கவும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதனால் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை தொடக்கத்தில் இசைக்கப்படுவதும் கட்டாயம் ஆகியுள்ளது.
ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் எதிர்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். இன்னொன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பிலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, இனி இது போன்ற அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்றும் விளக்கம் சொல்லியிருந்தார். அதையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளனர். முதல் 6 மாதங்கள் பார்த்துவிட்டு விமர்சிக்கலாம். ஆனால் பதவியேற்றதுமே, விமர்சிப்பது சரியான அரசியல் அணுகுமுறை இல்லை. நீண்ட, நெடிய அரசியல் அனுபவம் கொண்ட கட்சிகளுக்கும் அது பொருத்தமாக இருக்காது. குறைந்தபட்சம் மத்திய அரசின் சுற்றறிக்கைகள் குறித்தேனும் தெரிந்துகொண்டு அவர்கள் களமாட வேண்டும்.” என்றிருக்கிறார்.