சமூகநீதி, சாதி ஒழிப்பு மற்றும் மனித உரிமை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடும் செயற்பாட்டாளர். தமிழகம் முழுவதும் ஓயாமல் சுற்றுப்பயணம் செல்லும் இவரை சந்திக்க, கடும் முயற்சிக்கு பின்பு சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை வீரர், நண்பர் திரு. மே.அ.தனபாலன் அவர்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்தி சந்தித்தேன்.
மேட்டூர் நகரின் மையத்தில் உள்ள நகர்பூங்காவின் அருகில் உள்ளது அவரது வீடு. முதல் ஆச்சரியம் அவரது அலுவலகம். வீட்டின் பேஸ்மென்டில் பல ஆயிரம் புத்தகங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது. மிகப்பெரிய ஹால் முழுவதும் அலமாரிகளில் புத்தகங்கள். அதன் நடுவே அமர்ந்து நம்மை வரவேற்றார்.
30 நிமிட உரையாடலுக்குச் சென்ற நம்மிடம், சுமார் 4 மணி நேரம் உரையாடினார்.
அவர் பல தகவல்களை அள்ளிக் கொட்டி வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று புன்முறுவலோடு வழியனுப்பி வைத்தது இரண்டாவது ஆச்சரியம்.
மிக அன்போடு, பண்போடு உரையாடிய ஒரு சமூகப்போராளியின் புன்னகை ததும்பும் முகமும், உபசரிப்பும் மூன்றாவது ஆச்சரியம்.
“தொன்றுதொட்டு காவிரியின் கரையோரம் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. நிறைய நிலம் எங்கள் தாத்தாவிடம் இருந்தது. பலருக்கும் குத்தகைக்கு விட்டிருந்தார். அணை கட்டி தண்ணீர் மட்டம் உயர்ந்த போது தாத்தா வேறு இடம் சென்று விட முடிவெடுத்தார்.
எங்களது பக்கத்து காடு வைத்திருந்த கோபால் (Ex MLA) அவர்களின் தகப்பனார் இந்தப் பகுதி வேண்டாம் என்று பூலாம்பட்டி பகுதிக்கு குடிபெயர்ந்தார்.
மேடான இடத்துக்கு தாத்தா வந்து நிலங்களை வாங்கி கிணறு வெட்டி விவசாயத்தை தொடர வழிவகுத்தார்.
அந்த சமயத்தில், ஞாயம்பாடி என்ற இடத்திலிருந்து மக்கள் சவேரியார் பாளையம், பூமனூர், பூலாம்பட்டி, மார்ட்டள்ளி, கெளதள்ளி போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் வன்னியர்- கிறிஸ்தவர்கள்.
பெருமாக்கவுண்டனூர் என்ற பெயர் கொண்ட கிராமம் முன்பு ஆற்றோரம் இருந்தது. அங்கிருந்து வந்த மக்கள் கொளத்தூருக்கு 4 கி.மீ தூரத்தில் இப்போது ‘தார்க்காடு’ என்ற பெயரில் வழங்கும் ஊரில் வசிக்கின்றனர். தற்போது அங்குள்ளவர்கள் பெரும்பாலும் நன்கு படித்தவர்கள். புலம் பெயர்ந்தவர்களின் வம்சத்தினர் பலர் அங்குள்ளனர்.