நாம் சோகப்பட வேண்டிய அவசியம் இல்லை.
திமுகவை பொறுத்தவரைக்கும் எத்தனையோ தேர்தலைப் பார்த்திருக்கிறோம். 1949ல் தொடங்கி தேர்தல்களில் பல வெற்றிகளைக் கண்டதுண்டு, பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் தோல்வி அடைகிற நேரத்தில்தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல கிளம்பி எழக்கூடிய நிலையில் அது வரும்.
இங்கே கூட பேசியவர்கள் எல்லாம் ஏதோ சோகத்தில் இருப்பது போல நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல, இந்த மேடையில் இருக்கக்கூடியவர்கள் மட்டுமல்ல, எதிரே இருக்கக்கூடியவர்கள் கூட ஏதோ சோகமாக இருப்பதாகக் காட்சித் தருகிறீர்கள். நாம் சோகப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறோம்.
நம்முடைய திட்டங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஐந்து வருடம் ஆட்சிப் பொறுப்பு தந்தபோது, எல்லாத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்துவிட முடியாது. நாம் வெற்றி வாய்ப்பை இழந்து புதிய ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது, புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிற போது சொன்னேன், புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கக் கூடியவர்களுக்கு வாழ்த்துக்கள், ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நாம் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக வைத்தேன்.
ஆக நாம் வைத்திருக்கிற கோரிக்கை, இன்றைக்கு அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு கண்கூடாகப் பார்க்கிறோம். அதையேதான் சொன்னேன், நாமும் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.