"பூனைக்குட்டிகளுக்கு `தந்தை' யார்?" – பூனைகளின் காதல் பஞ்சாயத்தும் போலீஸின் அதிரடி தீர்ப்பும்!

Spread the love

பொதுவாக விவாகரத்து அல்லது குடும்பத் தகராறுகளில் `குழந்தை பராமரிப்புச் செலவு’ கேட்டு நீதிமன்றம் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூருவில் ஒரு படி மேலே போய், “உன் பூனைதான் என் பூனையைக் கர்ப்பமாக்கியது, அதனால் குட்டிகளை நீதான் வளர்க்க வேண்டும்” என ஒரு விசித்திரமான சண்டை வெடித்துள்ளது.

Kitten Custody Battle
Kitten Custody Battle

பெங்களூருவின் ஷேஷாத்ரிபுரம் பகுதியில் வசிக்கும் இரண்டு பக்கத்து வீட்டாருக்கு இடையேதான் இந்தப் பூனைப் போர் தொடங்கியது. ஒருவருடைய வீட்டில் ஆண் பூனையும், மற்றொருவர் வீட்டில் பெண் பூனையும் வளர்ந்து வந்துள்ளன.

இயற்கை விதியின்படி, அந்த இரு பூனைகளுக்கும் இடையே காதல் மலர, சில காலத்திற்குப் பிறகு பெண் பூனை நான்கு அழகிய குட்டிகளை ஈன்றெடுத்தது. பிரச்னையும் அங்கேதான் தொடங்கியது.

பெண் பூனையின் உரிமையாளர், நான்கு குட்டிகளையும் வளர்ப்பது கடினம் என்று கருதினார். உடனே அவர் ஒரு விசித்திரமான லாஜிக்கை முன்வைத்தார்: “இந்தக் குட்டிகளுக்கு தந்தை உங்கள் வீட்டு ஆண் பூனைதான். எனவே, தந்தையின் கடமையாக நீங்கள்தான் இந்தக் குட்டிகளைப் பராமரிக்க வேண்டும்” என்று கூறி, ஆண் பூனை உரிமையாளரின் வீட்டு வாசலில் குட்டிகளை விட்டுள்ளார்.

Kitten Custody Battle
Kitten Custody Battle

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆண் பூனை உரிமையாளர், “பூனைகளுக்கு எப்படிச் சொத்துரிமை அல்லது பராமரிப்புச் செலவு கேட்க முடியும்?” என மறுக்க, வாக்குவாதம் முற்றியது. சாதாரண சண்டையாகத் தொடங்கி, மிகத் தீவிரமான மோதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், குட்டிகளைத் தூக்கி எறிந்ததாகவும், மற்றவர் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிலைமையை உணர்ந்து ஒரு சமரசத் தீர்வை வழங்கினர்.

“நான்கு குட்டிகளில் தலா இரண்டு குட்டிகளை ஒவ்வொரு குடும்பமும் எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள செலவுகளை நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றனர்.

Kitten Custody Battle
Kitten Custody Battle

இறுதியில் இரு வீட்டாரும் அரை மனதுடன் சம்மதித்தனர். பூனைக்குட்டிகளுக்காக போலீசார் பஞ்சாயத்து செய்த இந்தச் சம்பவம், இணையதளங்களில் `Kitten Custody Battle’ என்ற பெயரில் பல மீம்களுக்கும், விவாதங்களுக்கும் உள்ளானது.

இந்தச் சம்பவம் வேடிக்கையாகத் தெரிந்தாலும், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றின் இனப்பெருக்கக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருடன் இணக்கமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *