தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருவதுடன் வேன் டிரைவராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று காலையில் மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகளை வாங்கிவிட்டு தனது கடையில் காய்கறிகளை இறக்கி வைத்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த படு பயங்கர படுகொலை நடந்துள்ளதால் இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சி ஒன்றிற்கு டிஜிட்டல் பேனர் அமைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் படுகொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மண்டல டி.ஐ.ஜி திருநாவுக்கரசர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் நேரில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், கொலை செய்யப்பட்ட பாலமுருகனின் உறவினர்களிடம் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி திருநாவுக்கரசர், “பாலமுருகன் கொலை சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள்” என்றார். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.