Business
oi-Velmurugan P
டெல்லி: மேற்கு ஆசியாவில் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டி உள்ளது. இவ்வாறு சர்வதேச சந்தை விலை அதிகரித்தாலும் இந்தியாவில் எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.23 என இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.5 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு $100 டாலருக்கு மேலும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் 2 சதவீதம் உயர்ந்து $95 டாலர் அருகிலும் வர்த்தகமாகியது. முன்னதாக பிரெண்ட் கச்சா எண்ணெய் கடைசியாக ஜூலை 23 அன்று $100 டாலர் என்ற அளவைத் தொட்டிருந்தது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக உள்ள இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி தான் செய்து வருகிறது. கச்சா எண்ணெயின் அதிகப்படியான விலை உயர்வு இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்து, வர்த்தக பற்றாக்குறை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகீறது.
சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருக்கிறது. இந்தச் சர்வதேச விலை உயர்வை எரிபொருள் விற்பனை நிறுவனங்களே ஏற்றுக் கொண்டு வருகின்றன. இதுகுறித்து இக்ரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், கார்ப்பரேட் ரேட்டிங்ஸ் இணைத் தலைவருமான பிரஷாந்த் வசிஷ்ட் கூறுகையில், “பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை லாப வரம்பு எதிர்மறையாக மாறியுள்ளது, உள்நாட்டுச் சமையல் எரிவாயுவிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது . “செப்டம்பர் மாதத்தில் இதுவரை உள்ள சராசரி விலையின்படி, பெட்ரோல் மீதான விற்பனை லாப வரம்பு லிட்டருக்கு ரூ.5 எதிர்மறையாகவும் (இழப்பு), டீசல் லிட்டருக்கு ரூ.23 எதிர்மறையாகவும் உள்ளது. மேலும் உள்நாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 வரை இழப்பு ஏற்படுகிறது” என்றார்.
சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக மாற்றமின்றி உள்ளன. கடைசியாக மே 25 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.61-ம், டீசல் ரூ.2.71-ம் உயர்த்தப்பட்டது. மே மாதத்தின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நான்கு விலை மாற்றங்கள் மூலம் பெட்ரோல் விலை மொத்தம் ரூ.7.35-ம், டீசல் விலை ரூ.7.53-ம் உயர்த்தப்பட்டு இருந்தது.
எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல்லின் தரவுகளின்படி, ஏப்ரல்-ஜூலை காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்த $40.5 பில்லியன் டாலரிலிருந்து 56 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து $63.4 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு கடந்த ஆண்டின் 81.5 மில்லியன் டன்களுடன் ஒப்பிடுகையில் 81.9 மில்லியன் டன்களாகப் பெரிய மாற்றமின்றி இருந்தது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை செப்டம்பர் 8 அன்று பீப்பாய்க்கு $108.91 டாலராக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் $90.19 டாலராகவும், ஜூலையில் $82.04 டாலராகவும் இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இதுவரை அதன் சராசரி $102.11 டாலராக உள்ளது.
பிரிங்க்வொர்க் ரேட்டிங்ஸ் அமைப்பின் ஆராய்ச்சித் தலைவர் ராஜீவ் சரண் கூறுகையில், அமெரிக்கா-ஈரான் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான விநியோக சிக்கல்கள் காரணமாகவே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை $100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. ஓபெக் பிளஸ் நாடுகள் உற்பத்தியை உயர்த்தாமல் நிலையாக வைத்திருப்பதாலும், புவிசார் அரசியல் அபாயங்கள் அதிகமாக இருப்பதாலும், வரவிருக்கும் மாதத்தில் விலைகள் தொடர்ந்து உறுதியாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்க வாய்ப்புள்ளது; பதற்றங்கள் தணிந்தால் மட்டுமே விலை குறையும்” என்றார்.
உயர்ந்த கச்சா எண்ணெய் விலை விமான போக்குவரத்து, சாயம் , டயர், ரசாயனம், தளவாடங்கள் மற்றும் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் உற்பத்திச் செலவை உயர்த்தக்கூடும். அதே நேரத்தில் இது பணவீக்கத்தை அதிகரித்து ரூபாயின் மதிப்பிற்கு அழுத்தத்தையும் கொடுக்கும். “ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகத் தொடர்ந்து தக்கவைத்து, நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை $100 டாலருக்கு மேல் தொடர்ந்து நீடித்து, அது பரவலான பணவீக்கத்திற்கு வழிவகுத்தால், வட்டி விகிதங்களைக் உயர்த்தும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது” என்று பிரிங்க்வொர்க் ரேட்டிங்ஸ் அமைப்பின் ஆராய்ச்சித் தலைவர் ராஜீவ் சரண் கூறினார்.

