“‘பெண் என்றால் இளக்காரமா?’… அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரி!” – Kumudam

Spread the love

வி.ராம்ஜி

பிரம்ம முகூர்த்த வேளையிலும் சந்திர உதயத்துக்குப் பின்னரும் ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியை விளக்கேற்றி வழிபட்டு வந்தால், இல்லத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் அகலும்; அமைதி இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் கிடைக்கும் என்பது ஐதீகம்! சாமுண்டீஸ்வரியின் சரிதத்தை முதலில் தெரிந்துகொள்வோம்.

மகிஷாசுரன் எனும் அரக்கன், கண்ணில் படுபவர்களையெல்லாம் கொடுமைப்படுத்தி வந்தான். இஷ்டம்போல் இஷ்டத்துக்கு ஆடினான். மற்றவர்களின் விருப்பங்களைக் குலைத்தான். முனிவர்களின் தவத்தைக் கலைத்தான். இந்திரர்களுக்கு பயம் கொடுத்து நிம்மதியை ஆட்டங்காணச்செய்தான். அவனை எவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. எதிர்த்தவர்கள் மடிந்தார்கள். இன்னலுக்குப் பயந்து எங்கேயோ ஓடினார்கள். அசுரனின் கொட்டம் அடங்கவே இல்லை. இதற்கெல்லாம் காரணம்… அவன் வாங்கி வந்திருந்த வரம்!

சிவபெருமான் குறித்து கடும் தவம் இருந்து மகிஷாசுரன் வரம் பெற்றிருந்தான். அவனுடைய தவத்துக்கு சிவபெருமான் கொடுத்த பலனாக அமைந்ததுதான் வரம். மகிஷாசுரன், சாகாவரம் கேட்டான். அதுமட்டுமா? ஆண்களாலும் விலங்குகளாலும் தண்ணீராலும் உனக்கு மரணம் ஏற்படாது என வரம் தந்தருளினார்.

இந்த வரம் கிடைத்ததும்தான், மகிஷாசுரனின் ஆட்டம் இன்னும் இன்னுமாக அதிகரித்தது. தேவர்களையும் முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தான். இதில் நிலைகுலைந்துபோன தேவர்களும் முனிவர்களும் சிவனார் கொடுத்த வரத்தையும் விவரங்களையும் சொல்லி உமையவளிடம் புலம்பித்தீர்த்தார்கள். ‘நம்ம சிவனார் இப்படியொரு வரத்தைத் தந்ததால் வந்த வினை’ என்று அழுதார்கள்.

அதாவது, ஆண்களால் மரணமில்லை, விலங்குகளால் மரணமில்லை. தண்ணீரால் மரணமில்லை என்பதைக் கேட்டு, பார்வதிதேவி சிரித்தாள். ‘மகிஷாசுரனுக்கு பெண்ணால்தான் அழிவு, அதுவும் என்னால்தான் அழிவு, கலங்காதிருங்கள்’ என உறுதியாகச் சொன்னாள். அப்படி பராசக்தி,  மகிஷாசுரனை அழிக்க எடுத்த அவதாரமே ஸ்ரீசாமுண்டீஸ்வரி.

சாமுண்டீஸ்வரி எட்டுத் திருக்கரங்களை உடையவள். தன் அனைத்துக்கரங்களாலும் தீய சக்திகளை அழிக்கிறாள் என்கிறது சாஸ்திரம். சக்தி வழிபாட்டில், சாமுண்டீஸ்வரி உக்கிரமானவள் என்கிறார் வேதிக் விஜய் சர்மா. அசுரனை அழிக்கும் பொருட்டு, பார்வதிதேவியானவள், கடும் ஆக்ரோஷத்துடன் அவதரித்தாள். அப்படி அவள் எடுத்த அவதாரமே சாமுண்டீஸ்வரி. அதனால்தான் கடும் உக்கிர ரூபினியாகத் திகழ்கிறாள்  சாமுண்டீஸ்வரி. அதுமட்டுமா? ஆண்கள் அழிவு வரக்கூடாது என்று வேண்டியிருக்கிறான். விலங்குகளால் செத்துவிடக்கூடாது என வரம் கேட்டிருக்கிறான்.

தண்ணீரில் மூழ்கி மாண்டுவிடக்கூடாது என பலன் பெற்றிருக்கிறான். இதில் பெண்களை விட்டுவிட்டான். ‘பெண் என்றால் இளப்பமாகிவிட்டதா அவனுக்கு’ என பராசக்தி, ஆவேசமானாள். மகிஷாசுரனை அழித்தே தீருவது என உறுதியெடுத்தாள். அதன்படியே மிகப்பெரிய யுத்தத்துக்குப் பிறகு அசுரனை அழித்தொழித்தாள்.

மகிஷாசுரனை அழித்த பின்னரும் கூட சாமுண்டீஸ்வரியின் உக்கிரம் தணியவில்லை. பின்னர் தேவர்களும் முனிவர்களும் அவளை சாந்தப்படுத்தினார்கள் என தேவி புராணம் சிலாகித்துச் சொல்கிறது.. மகிஷாசுரன் எனும் அரக்கன் வாழ்ந்த ஊர், மகிஷா என்றாகி பின்னர் மைசூர் என்றானதாகச் சொல்கிறது புராணம்.

துர்குணம் கொண்டவர்களுக்கும் தீய சிந்தனைகள் கொண்டவர்களுக்கும் உக்கிர ரூபினியாகவும் தன்னை அன்னையாக பாவித்து வணங்கும் பக்தர்களுக்கு சாந்த ரூபினியாகவும் இருந்து கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள்  சாமுண்டீஸ்வரி.

சாமுண்டீஸ்வரியின் ஸ்லோகங்கள் மிக மிக வலிமையானவை. மகா சக்தி கொண்டவை. மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது ஈடு இணையற்ற நன்மைகளை வழங்கும் என்று வேதிக் விஜய் சர்மா மெய்சிலிர்க்கச் சொல்கிறார்.

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ காளி ப்ரசோதயாத்

என்கிற ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடவேண்டும்.

ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தந்நோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

என்கிற ஸ்லோகத்தையும் சேர்த்து வழிபடுவது வளம் தரும்; பலம் சேர்க்கும்; எதிரிகள் வீழ்வார்கள். தடைகள் அகலும். செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் மாலையில் சந்திரோதயத்துக்குப் பின்னரும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், உள்ளத்திலும் இல்லத்திலும் இருக்கிற குழப்பங்கள், மனக்கிலேசங்கள் அகலும் என்பது உறுதி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *