ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன.
இதில் இன்று (மே.26) நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி-யும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் ஆர்சிபி கேப்டன், ரஜத் பட்டிதார், “எந்த மாதிரியான ஆடுகளம் அல்லது சூழல் இருந்தாலும் எங்களது சிறந்த பங்களிப்பை வழங்கவே நாங்கள் முயற்சி செய்வோம்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழுவதும் நாங்களும், குஜராத் அணியும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம்.
போட்டி நடைபெறும் குறிப்பிட்ட நாளில், எந்த அணி தங்களது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துகிறதோ மற்றும் அழுத்தமான சூழலில் பதற்றமடையாமல் நிதானமாக இருக்கிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.
பந்துவீச்சு தான் எங்களது பலம். நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்வோம். இதுவரை நாங்கள் அதைத்தான் செய்திருக்கிறோம். ஒரே விஷயத்தை மீண்டும் துல்லியமாக செய்வதுதான் ஆட்டத்தின் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

புவனேஷ்வர்குமார் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவருக்குத் தனது பலம் என்னவென்று நன்றாகத் தெரியும். அவர், அணியில் உள்ள இளம் பந்துவீச்சாளர்களிடம் பேசும் விதமும், அணியில் அவர் இருப்பதும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.