`பெரியார் அறிவுலகத்திற்கு இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்; நல்லவேளை..!’ – மு.க.ஸ்டாலின்

Spread the love

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கோவைக்கு வருகை தந்தார். பின்னர் நிலாம்பூர் பகுதியில் புதிய தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை தி.க., தலைவர் கி.வீரமணி உடன் இணைந்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கி.வீரமணி, ”நாம் அனைவரின் வாழ்நாளிலும் மிக முக்கியமான நாள். அதைச் செய்தவர் இங்கு இருக்கிறார். அவருடன் நாம் அனைவரும் மகிழ்ந்து நிற்கிறோம். இந்தச் சாதனைக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு நிச்சயமாக இருக்கும்.

கி.வீரமணி - ஸ்டாலின்
கி.வீரமணி – ஸ்டாலின்

இது வெறும் நூலகம் அல்ல, அறிவியலும் இருக்கிறது. இங்கு மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காது, பெரியார் கண்ட இனிவரும் உலகம் எப்படி இருக்க வேண்டும் சொல்லும்போது, எப்படி இருக்கும் என்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்துள்ளார். எனது வாழ்நாளில், 84 ஆண்டுகள் பொது வாழ்வில் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை நான் பெற்றது இல்லை. எனவே, அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். அறிவுலகம் பரவட்டும் அறியாமை நீங்கட்டும். சாதி, மதம் பேதம் இல்லாமல் எல்லோரும் வரும் இடம் இது தான். இதை நிர்மானித்தவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார், திராவிடம் வாழும் நூலகம் பெருகும்” என்றார்.

இதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் அரசின் கனவு திட்டமான தந்தை பெரியார் பெயரில் கட்டப்பட்டும் இந்த அறிவு உலகத்தை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே இதை நான் பார்த்திருந்தாலும், திறந்து வைக்கப்பட்ட பிறகு, முழுமை அடைந்த பிறகு இன்று நானும், ஆசிரியர் வீரமணியும் பார்த்தோம். அதிகம் கூட்டம் இருந்த காரணத்தால் பொறுமையாக அனைத்தையும் பார்க்க முடியாத சூழல் இருந்தது. அதனால் இன்னொரு முறை நிச்சயமாக வந்து முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகம் போய்க்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், திராவிட இயக்கம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? பெரியார் உணர்வுகள் என்ன? லட்சியம் என்ன? என்பதை அறிந்து கொள்ள, இளைஞர்கள் மாணவர்கள் இதை நல்ல நிலையில் பார்த்து அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள்.

கி.வீரமணி - ஸ்டாலின்
கி.வீரமணி – ஸ்டாலின்

ஏற்கெனவே திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கினார். அதன் பின்பு தி.மு.க ஆட்சியில் மதுரையில் கலைஞர் பெயரில் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நெல்லையில் காயிதே மில்லத் பெயரிலும், திருச்சியில் காமராஜர் பெயரிலும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நல்லவேளை இந்த தந்தை பெரியார் அறிவுலகத்தைப் பொறுத்தவரை 99 சதவிகிதம் வேலை முடிந்துவிட்டது. பாதியில் நிறுத்தி இருந்தால், இந்த அரசு மூடு விழா நடத்தி இருந்தாலும் ஆச்சர்யமில்லை. நல்ல வேளை தப்பித்து விட்டது. இதேபோல மற்ற நூலகங்களும் வரவேண்டும் என்ற விருப்பத்தை உங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *