காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய, பா.ஜ.க மணப்பாறை வடக்கு ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் ஆர்.சுப்பிரமணி,
“மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம், வட்டாட்சியர் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்காக இந்த வளாகத்துக்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஏராளமானோர் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். ஒரே பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதால் வாகனங்களின் வருகை அதிகரித்து, போதிய இடவசதி இல்லாத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.