பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பரந்தாமன், “கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, ஒரு தவறான கண்ணோட்டத்தை தவெக உருவாக்கி இருக்கிறது.

புத்தக கொள்முதலில் தவறான புத்தகங்கள் வந்துள்ளதாக தகவல் கிடைத்தும், ஏன் அதனை திரும்ப பெறுவதற்கு முதலமைச்சர் உத்தரவிடவில்லை? இந்த புத்தகங்கள் அனைத்தும் யார் கொள்முதல் செய்தார்கள், எவ்வளவு கொள்முதல் செய்தார்கள் என்ற விவரத்தை ஏன் இன்னும் அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் வெளியிடவில்லை?
இது தொடர்பான விவரங்களை தவெக தனது ஐடி விங் தளத்தில் வெளியிட்டு வருகிறது. ஒரு குற்றச்சாட்டு வருகிறது என்றால், முதலில் அரசு தரப்பில் இருந்துதான் விளக்கம் வரவேண்டும். திமுக ஆட்சியில் வெளிப்படைத் தன்மையோடு புத்தகங்களை கொள்முதல் செய்வதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள புத்தகங்கள் எந்த தேதியில் வாங்கப்பட்டன, அதனை வாங்குவதற்கு யார் அனுமதி அளித்தது மற்றும் எந்த தேதியில் அரசாங்க கணக்கில் இருந்து பணப்பறிமாற்றம் மேற்கொள்ளப்பட்டன?