பெற்றோரின் கண்டிப்பு தடையல்ல! – கல்லூரி மாணவர்கள் உணர வேண்டிய உன்னத வாழ்வியல் பாடம் | Why College Life Is the Ultimate Sculptor of Human Character.

Spread the love

சுயசுத்தம்: வாழ்வின் அடிப்படைத் தத்துவம்

சமையலுக்கு முன் காய்கறிகளையும் அதனை சமைக்க உதவும் பாத்திரங்களையும் சுத்தமாக இருப்பதற்கு முன்னுரிமை கொடுத்து சுத்தமான நீரில் கழுவுகிறோம். ஏனெனில், அழுகிய காய்களை அழுக்குப் படிந்த பாத்திரத்தில் சமைத்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரைக் குடிக்கும் அளவிற்குச் சென்று விடும். 

அதுபோல, அறிவைப் பெறுவதற்கு முன் மனதின் அழுக்குகளை அகற்றுவது அவசியம். தீய சிந்தனைகள் படிந்த மனத்தில் கல்வி நிலைக்காது. உடல் தூய்மை என்பது மனத் தெளிவின் தொடக்கம். நல்ல மனதுடைய அம்மாக்களைக் கொண்ட சமையலறையும் நல்லாசியர்களைத் தக்க வைத்துக்கொள்ளும் கல்லூரியும் ஒன்றே.

வேற்றுமையில் ஒற்றுமை

கல்லூரிப் பருவம் என்பது வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்கும் காலம் அல்ல; மனிதர்களின் பன்முகத்தன்மையையும், வாழ்வின் எதார்த்தத்தையும் புரிந்துகொள்ளும் ஒரு பெரும் பாடசாலை. பெற்றோர்கள் ஒவ்வொருவரும் கல்வி, தொழில், அனுபவம் மற்றும் பொருளாதார நிலை என வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டவர்கள் என்பதை உணர்வதே முதிர்ச்சியின் முதல் படி.  

காலநிலை, உணவு முறைகள், வட்டார மொழி, பண்பாடு மற்றும் உடை போன்றவைகள் இடத்திற்கு இடம் மாறுபடுவதற்கான வெளிப்படையான வேறுபாடுகள். இவைகள் மனிதர்களைப் பிரிப்பதற்கான காரணங்கள் அல்ல, மாறாக நம்மை வளப்படுத்துவதற்கான அம்சங்கள் என்பதைப் மாணவர்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது அவசியம்.

நோக்கத்தின் ஒருமைப்பாடு: பெற்றோரின் கனவும் மாணவனின் கடமையும்

வசதி படைத்தவர்களும் வறுமையில் வாடுபவர்களும் ஒரே நோக்கத்திற்காகத்தான் தனது பிள்ளைகளை க்ல்லூரிக்கு அனுப்பி வருகிறார்கள். அதாவது, வறுமையில் உள்ளவர்கள் குடும்பத்தை உயர்த்தி தாங்கிப் பிடிக்கவும், வசதி படைத்தவர்கள், முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களையும் பெருமையையும் காத்து வளர்க்கத் தேவையான தகுதிகளைப் மீட்டெடுக்கவும் அனுப்பி வருகிறார்கள். 

எவரையும் ஏமாற்றவோ, இனம் பார்த்துப் பிரிக்கவோ, ஆசிரியரை அவமதிக்கவோ எந்தப் பெற்றோரும் அனுப்பவில்லை. மாறாக, தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் மதிப்புமிக்கவர்களாக மாற வேண்டும் என்ற தூய நோக்கமே அனைவரையும் ஒரு சேர இங்கே இணைத்துள்ளது என்பதனை பிள்ளைகள் உணர வழிவகை செய்தால் குடும்பத்திலும் சமூகத்திலும் மாற்றத்தினை எதிர்பார்க்கலாம்.

ஆசிரியர்களின் கடமை: ஆளுமைச் சிற்பிகள்

இந்த வாழ்வியல் உண்மைகளை கிடைக்கின்ற காலத்தில் யோசித்தும் சேகரித்தும் மாணவர்களிடம் சேர்ப்பது ஒவ்வொரு கல்லூரி ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். ஆசிரியர்கள் வெறும் பாடங்களை நடத்துபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது; மாணவர்களின் மனப்பக்குவத்தை வடிவமைக்கும் சிற்பிகளாகச் செயல்பட வேண்டும். 

நல்ல பழக்கவழக்கங்கள், பண்புகள் போன்ற அறம் சார்ந்த வாழ்வியல் முறைகள், பகிர்ந்து கற்றலின் நன்மைகள் மற்றும் பெற்றோரின் கனவு ஆகியவற்றின் அவசியத்தை ஒவ்வொரு மாணவனின் மனதிலும் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.  இவ்வாறு போதிப்பதன் மூலம், நற்சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக மாணவர்களை மாற்ற முடியும் என்பது அனைவரது கடமையாகும்.

மதிப்பிற்கான தேடல்: இரும்பும் தங்கமும்

வழியில் ஒரு இரும்பு கம்பி கிடந்தால் அதைக் கடந்து செல்கிறோம்; அதுவே தங்கக் கம்பி என்றால், அடுத்தவர் பார்க்கிறார்களா என்று கவனித்து எடுத்துக்கொள்கிறோம். இரண்டுமே பூமியில் இருந்து எடுக்கப்பட்ட தாதுக்கள்தான், ஆனால் அவற்றின் ‘மதிப்பு’தான் நம்மை ஈர்க்கிறது. இது மனிதனுக்கும் பொருந்தும். 

ஒரு மாணவன் பண்பு, ஒழுக்கம், நடத்தை மற்றும் மதிப்பிற்கான நற்குணங்களைப் பெற்றிருந்தால், தேடி வந்து உபசரிக்கும் காலம் அமையும். இரும்பாகக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவனை, தங்கமாக மாற்றி ஆளாக்கும் ‘ஆளுமைச் சிற்பி’யாக கல்லூரிப் பருவம் திகழ வேண்டும். அப்போதுதான் தன் மீது உண்மையான நேசம், பாசம் கொண்டவர்களை அடையாளம் காண முடியும்.

முடிவுரை

கல்லூரிப் பருவம் என்பது விளையாட்டு முறை, உணவுப் பகிர்வு, அறிவுப் பரிமாற்றம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் கூடாரம். இந்த அனுபவங்கள் மூலம் வளரும் மாணவர்கள், நற்பண்புகள் கொண்ட விட்டுக் கொடுத்து வாழும் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்த்தும் காலமே இது. தன் வேர்களை உணர்ந்து, பொறுப்புகளை ஏற்றுச் செயல்படும் ஒவ்வொரு மாணவனும், வெறும் பட்டதாரியாக மட்டும் அல்லாமல், உலகையே சீரமைக்கும் பெரும் சக்தியாக உருவெடுப்பான் என்பது திண்ணம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *