மகாபெரியவா, கும்பகோணத்துல வாசம் பண்ணிண்டிருந்த காலகட்டம். அந்தச் சமயத்துல ஒருநாள், பக்தர்கள் முன்னிலையில் பேச ஆரம்பிச்சார் மகான்.
இந்த லோகத்துல நாம எல்லாருமே யார் மேலயாவது இல்லைன்னா, எது மேலயாவது நம்பிக்கை உள்ளவாளாகத்தான் இருக்கோம்.
என்னடா ஒரு சன்யாசி இப்படிச் சொல்றானேன்னு நினைக்கக்கூடாது. எல்லாத்தையும் துறந்துட்டாலும் சுவாமிமேல இருக்கற நம்பிக்கையைத் துறக்கமுடியாது இல்லையா? அதனாலதான் சொல்றேன். சரி, இந்த நம்பிக்கைகள்ல ரொம்ப உயர்வானதுன்னா, அது எது தெரியுமோ? பெத்தவா குழந்தைகள் மேல வைக்கற நம்பிக்கைதான்.
ஏன், குழந்தைகள் பெத்தவா மேல வைக்கற நம்பிக்கைன்னு சொல்லாம இப்படி மாத்திச் சொல்றேன்னா, குழந்தைகள் வளர வளர, அது பெத்தவா கையைப் பிடிச்சுக்காம, தானாவே நடக்க முடியும்னு. தன்னை நம்பிண்டு பெத்தவா கையை விட்டுடும். ஆனா, குழந்தைகள் வளர வளர, பெத்தவா தளர ஆரம்பிச்சுடுவா. அந்தச் சமயத்துல நம்ப குழந்தைகள் நாம விழாதபடி பார்த்துப்பா: நமக்கு ஆதரவா, அனுசரணையா இருப்பான்னு முழுசா நம்புவா.
இதை எதுக்குச் சொல்றேன்னா, இந்தக் காலத்துல குழந்தைகள் வளர்ந்ததும் அப்பா அம்மாவைப் பாசத்தோட பார்க்கறதைவிட பாரம்னு நினைச்சுப் பார்க்கறதுதான் அதிகரிச்சுண்டே வருது. ஒண்ணை ஞாபகம் வைச்சுக்குங்கோ. இன்னைக்கு நீங்க பெத்தவாளை பாரமா நினைச்சா, நீங்க பெத்தவா நாளைக்கு உங்களை பாரமா நினைப்பா. அதை உணர்ந்துண்டா போதும்.
பெத்தவாளோட நம்பிக்கையைக் காப்பாத்தணும்கற எண்ணம், தானாவே வந்துடும்!” பரமாசார்யாளோட இந்த உபதேசம், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் இல்லையா?


