“பேச வார்த்தைகள் இல்லை… ஆனால் நினைவுகளில் அவர்தான்!” – அண்ணனுக்காக ஒரு தங்கையின் நெகிழ்ச்சி மடல் | Reliving the Pure Aesthetics of Director Vikraman’s Epic with Actor Vijay

Spread the love

“பூவே உனக்காக” திரைப்படம் எனக்கு இன்னொரு காரணத்திற்காகவும் மிகவும் பிடிக்கும். ஒருதலைக் காதலை இவ்வளவு கண்ணியமாகவும், அழகாகவும் சொல்லிய படங்கள் மிகக் குறைவு. காதல் என்பது ஒருவரை அடைவது மட்டுமல்ல; அவர் மகிழ்ச்சியாக வாழ்வதை மனதார விரும்புவதும் காதல்தான் என்பதை விஜயின் கதாபாத்திரம் உணர்த்தியது. அதனால்தான் இன்றும் அந்தப் படம் காலத்தை வென்ற படைப்பாகப் போற்றப்படுகிறது. விஜயின் திரைப்பயணத்தில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையையும் குடும்ப ரசிகர்களின் பேராதரவையும் பெற்றுத் தந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

என் அண்ணன்தான் எனக்கு விகடன் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். “நல்ல தமிழ் படிக்க வேண்டும்; நல்ல எழுத்துகளை ரசிக்க வேண்டும்” என்று சொல்லி விகடனை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்தவர் அவர்தான். இன்று விகடன் நடத்தும் இந்தப் போட்டிக்காக நான் கட்டுரை எழுதுவதற்கே காரணம் அவர்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் என் அண்ணனின் அன்பும், அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த தமிழ் வாசிப்பின் மணமும் கலந்திருக்கிறது.

பூவே உனக்காக - 2

பூவே உனக்காக – 2

இன்னொரு அழகான ஒற்றுமையும் என் மனதை நெகிழ வைக்கிறது. ஜூன் 22 விஜய் சாரின் பிறந்தநாள். ஜூன் 21 என் அண்ணனின் பிறந்தநாள்;அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு நாட்களும் எனக்கு மிகவும் சிறப்பானவை. ஒரு நாள் என் அண்ணனைக் கொண்டாடுகிறேன்; மறுநாள் என் மனதில் அண்ணன் போன்ற இடத்தைப் பிடித்திருக்கும் விஜய் சாரை வாழ்த்துகிறேன். விஜய் சாரின் புன்னகையைப் பார்க்கும்போதெல்லாம், என் அண்ணனின் புன்னகைதான் என் நினைவுக்கு வருகிறது. அதனால்தான், எனக்கு விஜய் ஒரு நடிகர் மட்டுமல்ல; என் அண்ணனின் இனிய நினைவுகளை உயிர்ப்பிக்கும் ஒரு அழகான உணர்வு.

முப்பது ஆண்டுகளாக ரசிகர்களின் அன்பை ஒரே அளவில் பெற்றிருப்பது சாதாரண சாதனை அல்ல. அது அவரது கடின உழைப்புக்கும், எளிமைக்கும், ரசிகர்களிடம் காட்டும் அன்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

மீண்டும் இறுதியாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி விஜய் அண்ணா! உங்கள் புன்னகை என்றும் மாறாமல் இருக்கட்டும். என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையில், உங்கள் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக அல்ல; குடும்ப உறவுகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் அழகான உணர்வாக என்றும் நிலைத்திருக்கிறது.

உங்கள் தங்கையாக,

இந்திரா ப்ரியதர்ஷினி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *