பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU), மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தொடர்ந்து மாணவர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் பெண்கள் விடுதியில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக சில மாணவர்கள் கூறினர். இதையடுத்து நூற்றுக்கணக்கான தங்கும் விடுதி மாணவர்கள் பொதுவான பகுதிகளில் கூடி, கோஷங்களை எழுப்பி அலறல் சத்தத்திற்கு பதிலிக்கும்படி கோரி போராடினர். இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆனால் கூட்டத்தில் சில மாணவர்கள் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர். அதோடு புறக்காவல் நிலையத்தை கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பதற்றம் தீவிரமடைந்து மாணவர்கள் பல்கலைக்கழக கட்டடத்தை சேதப்படுத்தியதோடு, அதற்கு தீவைத்தனர்.
நேற்று நள்ளிரவில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள் இன்று காலை வரையிலும் நீடித்தன. பல்கலைக்கழக வளாகத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவரால் பெண் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்றும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும், தற்போது மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது அறை தோழி மற்ற மாணவர்களுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று நள்ளிரவில் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், ஆரம்பத்தில் போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்றதாக ஒரு மாணவர் கூறினார். இருப்பினும், பல்கலைக்கழகத்தின் நுழைவுவாயில்கள் திறக்கப்பட்டபோது, கல்லூரியைச் சாராத சிலர் உள்ளே நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தினர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொருட்களைச் சேதப்படுத்தினர். ஆனால், அனைத்தும் வெறும் வதந்திதான் என்று நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி கெளரவ் கூறுகையில்,” மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை.
ஆனால் மாணவர்கள் ஜலந்தர் நெடுஞ்சாலையை மறித்து போராடுவதாக நேற்று இரவு எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் அங்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். அப்போதுதான், எல்.பி.யு. (LPU) பல்கலைக்கழக மாணவர்கள் சில பிரச்னைகளை எழுப்பியிருப்பதும், பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஒன்று நடந்ததாக வதந்திகள் பரவியிருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
ஆனால், அத்தகைய குற்றம் தொடர்பான எந்தத் தகவலும் எங்களுக்குப் புகாராக அளிக்கப்படவில்லை. இது குறித்து மாணவர் சங்கத்துடன் பேசி இருக்கிறோம். அவர்கள் அதை விசாரித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையே தவறான புரிதல் இருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு இடையே ஒரு சந்திப்பை நடத்த முயற்சித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார். போராட்டத்தால் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
இது குறித்து லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுத்த அறிக்கையில், வதந்திகளை புறக்கணிக்குமாறு அறிவுறுத்தியதுடன், “வளாகத்திற்குள் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை, தவறான வழிகாட்டக்கூடியவை மற்றும் தீய நோக்கமுள்ள தரப்பினரால் பரப்பப்படுபவை. எவ்வித அமைதியின்மையிலும் ஈடுபடாமல், உங்கள் விடுதி, அறை அல்லது இருப்பிடத்திற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும், ஆத்திரமூட்டும் அல்லது இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவிகள் காணாமல் போனதாகவும் வதந்தி பரவியது. ஆனால் மாணவிகள் காணாமல் போனதாகப் பரவிய வதந்திகள் ஆதாரமற்றவை என்று கூறிய பல்கலைக்கழக பதிவாளர் சர்மா, அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று மாணவர்களிடம் விளக்கிக் கூறியதாகத் தெரிவித்தார். காணாமல் போனதாகக் கூறப்படும் மாணவிகள் குறித்த விவரங்களை எந்தவொரு மாணவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுச் சொத்து சேதப்படுத்தப்பட்டது குறித்துக் காவல்துறை விசாரணை தொடங்கியுள்ள போதிலும், மாணவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பல்கலைக்கழக விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும் மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.