மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா சார்பாக அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிர்சாத். இவர் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். சாம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் சஞ்சய் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,”‘சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி தலைமையகம் ஒரு காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்த நிலமாக இருந்தது. இப்போது அங்குள்ள ஆவிகள் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன. எனவே மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
மாநகராட்சி அலுவலக கட்டடம் ஒரு நிழலின் கீழ் இருக்கிறது. கட்டடம் நிற்கும் இடம் முன்பு அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது. இது ஒரு புதைகுழியின் ஒரு பகுதியாக இருப்பதால், பேய் நடமாட்டம் இங்கு காணப்படுகின்றன.

மேலும் அவை மக்களை அமைதியின்மைக்கு ஆளாக்குகின்றன. இதிலிருந்து நீங்கள் விடுதலை பெற விரும்பினால், சரியான இடத்தில் கட்டடத்தைக் கட்டுங்கள். நகரம் மேம்பட வேண்டும். இந்த ஆன்மாக்கள்கூட சாந்தி அடையும், நீங்களும் நிம்மதி அடைவீர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
அவரது கருத்து பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அவரது கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது. இது குறித்து நெட்டிசன்கள், அமைச்சரை விஞ்ஞானமற்ற மற்றும் உணர்ச்சியற்றவர்” என்று குறிப்பிட்டனர். இத்தகைய அறிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான திட்டம் இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் சஞ்சய் தனது கருத்து குறித்து விளக்கம் கொடுக்கவில்லை.