International
oi-Vigneshkumar
வாஷிங்டன்: உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாகப் பல சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் வடக்கு கலிபோர்னியா எனப் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பூகம்பங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா அல்லது வெறும் தற்செயலான சம்பவங்களா என்ற கேள்வியே இப்போது எழுந்துள்ளன.
முதலில் வெனிசுலா நாட்டில் புதன்கிழமை அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நொடிக்குள் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் என மிக வலிமையான பூகம்பங்கள் ஏற்பட்டதால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் பலர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

நிலநடுக்கங்கள்
முதல் 72 மணி நேரம் உயிரோடு இருப்பவர்களை மீட்பதற்கான முக்கியமான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு உடல்களை மீட்டெடுப்பதே முக்கிய நோக்கமாக மாறிவிடுகிறது. இந்த பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்தது. குறைந்தது 50,000 பேர் காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகின.
அதே நாளில் வடக்கு கலிபோர்னியாவின் கிராமப்புறப் பகுதியில் 5.6 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு ஜப்பானின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த அதிர்வுகள் அங்குள்ள மக்களைப் பெரிதும் பாதித்தன. பூகம்பங்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. வெனிசுலா, வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, தெற்கு ஆசியாவும் அதன் சொந்த நிலநடுக்கத்தைச் சந்தித்தது.
பூகம்பம்
சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் மையம் கொண்டது. இந்த அதிர்வுகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளிலும் உணரப்பட்டன. ஆனால் இந்த பூகம்பத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.
தொடர்பு இருக்கா?
இப்படி அடுத்தடுத்து பூகம்பங்கள் வருவதால்.. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. அதற்கு முன்பு பூகம்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது குறித்து நாம் பார்க்கலாம். பூமியின் வெளிப்புற அடுக்கு பல பெரிய துண்டுகளாக உடைந்துள்ளது. இந்த துண்டுகளை டெக்டானிக் பிளேட்கள் என்று அழைக்கிறோம். இந்த பிளேட்கள் மிகவும் மெதுவாக, அதாவது ஆண்டுக்கு சில சென்டிமீட்டர் என்ற வேகத்தில் நகர்கின்றன
அவை ஒன்றுடன் ஒன்று மோதும்போது, ஒன்றை ஒன்று கடந்து செல்லும்போது அல்லது பிரிந்து செல்லும்போது அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கிறது. அந்த அழுத்தம் அதிகமாகும்போது பாறைகள் திடீரென நழுவி, நில அதிர்வுகளை வெளியிடுகின்றன. இதுவே வலிமையானதாக இருக்கும்போது பூகம்பத்தை ஏற்படுத்துகிறது.
டெக்டானிக் பிளேட்
இந்த முறை ஏற்பட்ட பூகம்பங்கள் சில நாட்களுக்குள் நடந்திருந்தாலும், அவை வெவ்வேறு டெக்டானிக் பிளேட் எல்லைகளில் நிகழ்ந்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பூகம்பங்கள் இந்திய பிளேட் மற்றும் யூரேசிய பிளேட்டுக்கு இடையிலான மோதல் மண்டலத்தில் ஏற்பட்டவை. இந்திய பிளேட் தொடர்ந்து வடக்கு நோக்கி யூரேசிய பிளேட்டுக்குள் தள்ளப்படுவதால், இமயமலை மற்றும் ஹிந்து குஷ் பகுதிகள் உலகில் அதிகளவில் பூகம்பத்துக்கு உள்ளாகும் இடங்களில் ஒன்றாக உள்ளன. மேலும், வெனிசுலா நாடானது கரீபியன் பிளேட் தென் அமெரிக்க பிளேட்டை கடந்து செல்லும் எல்லையில் அமைந்துள்ளது.
இந்த பகுதிகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனித்தனி டெக்டானிக் அமைப்புகளைச் சேர்ந்தவை என்பதால், இந்த பூகம்பங்கள் ஒரே தொடர்ச்சியான நிகழ்வின் பகுதியல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை ஏற்கெனவே நில அதிர்வு செயல்பாடு அதிகம் உள்ள பகுதிகளில் தனித்தனியாக ஏற்பட்ட சம்பவங்கள் தான் என்கிறார்கள்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் பார்ன்ஹார்ட் கூறுகையில், “பூகம்பங்கள் உலகம் முழுவதும் தினசரி நடக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வெகு தொலைவில் நடக்கின்றன. இப்போது சில நாட்களில் மக்கள் அதிகம் இருக்கும் நாட்களில் அடுத்தடுத்து பூகம்பம் ஏற்பட்ட ஒரு விசித்திரமான நாள் மட்டுமே” என்றார்.
இந்த பூகம்பங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அல்ல என்றாலும், பூமியின் டெக்டானிக் அமைப்புகள் எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால் இத்தகைய நிகழ்வுகள் எப்போதும் சாத்தியமே. மக்கள் வசிக்கும் பகுதிகளில் இவை ஏற்படும்போது மட்டுமே அவை நமது கவனத்தை ஈர்க்கின்றன. பூகம்பங்கள் நடப்பது இயற்கை என்றாலும் அவற்றுக்கு தயாராக இருப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடிய சிறந்த வழி!

