கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் தேர்தல் அதிகாரிகள் 823 வாக்குகளை எண்ணவில்லை எனவும், இது சம்பந்தமாக மனு அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தி.மு.க வேட்பாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க வேட்பாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளருமான மகேஷ் கூறுகையில், “கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் நான். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உதயசூரியன் சின்னத்தில் நான் 74,831 வாக்குகளைப் பெற்றுள்ளேன்.
அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 75,045 வாக்குகள் பெற்றுள்ளார். அதாவது, என்னை விட அவர் 214 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்தவுடன், நான் தேர்தல் அதிகாரியிடம் ஒரு கடிதத்தை வழங்கினேன்.
அதற்கு முக்கியக் காரணம், வாக்கு எண்ணிக்கையின் போது சுமார் எட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரியாக வேலை செய்யவில்லை. அவை பழுதான இயந்திரங்கள் என்று கூறப்பட்டது.
பிறகு அவற்றை மீண்டும் எண்ணினார்கள். அதைவிட மிக முக்கியமான விஷயம், 823 தபால் வாக்குகள் (Postal Ballots) எண்ணப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

85 வயதிற்கு மேற்பட்டவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டபோது, அதிகாரிகள் சிலரது கைநாட்டுகளைப் பெற்றுள்ளனர். ஆனால், அந்த வாக்கின் வரிசை எண்களை (Serial Numbers) அதிகாரிகளே தவறாக மாற்றி எழுதி ஒரு குளறுபடியைச் செய்துள்ளனர்.
இது வாக்களித்த மக்களின் தவறு அல்ல, தேர்தல் அதிகாரிகளின் தவறு. இந்த 823 வாக்குகளையும் எண்ண வேண்டும் என்றும், வாக்குகளை மீண்டும் ஒருமுறை மறு எண்ணிக்கை (Recounting) செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரியிடம் அந்த இடத்திலேயே கடிதம் கொடுத்தேன்.