பேஷ்..பேஷ்..நரசுஸ் ! கமகமக்கும் நூற்றாண்டு! – Kumudam

Spread the love

ஒரே பாடலில் கதாநாயகன் மிகப் பெரிய தொழிலதிபராக மாறி, தொழிலில் வெற்றிக்கொடி நாட்டுவதையெல்லாம் சினிமாவில் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால். நிஜத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதனை நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வெற்றிச் சரித்திரம் படைப்பதென்பது சாதாரணமான விஷயம் அல்ல: அது ஒரு சாதனை!

அந்த வகையில் நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்டது சேலம் நரசுஸ் காபி நிறுவனம்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலம். சேலத்தில் வசித்து வந்த லட்சுமி நரசிம்மன் என்பவர் காபி பிரியர்களான தனது ஆங்கிலேய நண்பர்களுக்காகக் காபி தயாரித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அதுவே பின்னர் அவரின் தொழிலாகியது. நரசிம்மனுக்கு நெருங்கியவர்கள் அவரைச் செல்லமாக ‘நரசு’ என்று அழைப்பார்கள். அதே பெயரில், 1926-ம் ஆண்டு ‘நரசுவின் காபி’ என்னும் பொருள்பட ‘நரசுஸ் காபி’ என்ற பிராண்ட் உருவானது.

சேலத்தில் தொடங்கிய நரசுஸ் காபியின் வாசம் தமிழகமெங்கும் வீசத் தொடங்க, நிறுவனத்தின் வளர்ச்சியும் வேகமெடுத்தது. 1939-ம் ஆண்டு அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த வி.வி.கிரியால் நரசுஸ் காபியின் தலைமையகம் சேலத்தில் திறந்து வைக்கப்பட்டது.

1966-ம் ஆண்டு, ஆர்.பி.சாரதி தலைமையிலான ஒரு கூட்டாண்மை நிறுவனம் நரசுஸ் காபி நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. ஆர்.பி.சாரதியின் மகனும், தற்போதைய நரசுஸ் காபி நிறுவனத் தலைவருமான சிவானந்தம் நிர்வாகத்திற்கு வந்த பின், காபிச் சந்தையில் நரசுஸின் பங்கு பல மடங்கு அதிகரித்துள்ளது.

“கல்லூரிப் படிப்பு முடிந்ததும், 1983-ல் ஜெர்மனி சென்று, அங்குள்ள நவீன காபி தயாரிப்பு இயந்திரங்களின் நுட்பங்களைத் தெரிந்துகொண்டேன். 1994-ம் ஆண்டு எங்களது சேலம் ஆலையில்  முழுமையான Form-Fill-Seal (FFS) தானியங்கி பேக்கிங் அமைப்பை
 வெற்றிகரமாகச் செயல்படுத் தினோம். தவிர, ‘காபி க்யூரிங்’ (Coffee Curing) எனப்படும் பதப்படுத்தும் வசதியையும் வடிவமைத்து நிறுவியுள்ளோம்” என்றார், சிவானந்தம்.

ஒவ்வொரு நாள் காலையும் நரசுஸ் காபியுடன்தான் விடியும் என்ற நிலைக்கு மக்கள் மனம் மாறிய நிலையில், சேலம் மட்டுமல்லாது, சென்னை, கடலூர், கும்பகோணம், காரைக்குடி, புதுச்சேரி என நரசுஸ் காபியின் கிளைகள் முளைத்தன.

ஆலையிலிருந்து வரும் வறுக்கப் பட்ட காபிக் கொட்டைகள், காபி பிரியர்கள் முன்பாகவே ஃப்ரெஷ்ஷாக அரைக்கப்பட்டு, சுடச்சுடக் காபி பவுடர் தயாரானது. காபி பொடி கண்ணில் தெரியும் வகையிலான ஸீத்ரூ கவரில் உடனுக்குடன் பேக் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட, நரசுஸ் காபிக் கடைகளில் திருவிழாக் கூட்டம்! ஒவ்வொரு நகரிலும் நரசுஸ் காபி கடை ஒரு லேண்ட்மார்க்காகவே மாறியது. திருமணங்கள், விழாக்களிலெல்லாம் நரசுஸ் காபியின் வாசம் கமகமத்தது.

1993-ம் ஆண்டு, சிக்கரி கலந்த ‘உதயம்’ (Udhayam) காபியை அறிமுகப்படுத்தியது நரசுஸ். இதற்கும் வாடிக்கையாளர்கள் வரவேற்புக் கம்பளம் விரித்தனர். இந்தக் கால கட்டத்தில், நெஸ்கபே, ப்ரூ போன்ற பன்னாட்டு நிறுவனங் கள், இன்ஸ்டன்ட் காபியை அறிமுகப்படுத்தின.

“ஃபில்டர் காபியைப் போல் அல்லாமல் இன்ஸ்டன்ட் காபி தயாரிப்பதற்கு எளிதாக இருந்ததால், அதன் பயன்பாடு அதிகரித்தது. எனவே, ஓராண்டு கடுமையான உழைப்பிற்குப் பின் இன்ஸ்டன்ட் காபிச் சந்தையில் நாங்களும் வெற்றிகரமாக நுழைந்து விட்டோம்” என்கிறார், சிவானந்தம்.

இந்த நிறுவனத்தின் அடுத்த தலைமுறை வாரிசு ‘ஸ்ருதீப்’ சிவானந்தத்தின் மகன். இவர் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே, காபி வணிகத்தில் நுழைந்து விட்டார்.

“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 81 ஸ்டோர்கள் மற்றும் பெங்களூருவில் ஒரு கடையைக் கொண்ட சில்லறை விற்பனை நெட்வொர்க் வைத்துள்ளோம். விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி, சொந்த இணைய தளம், டிமார்ட் போன்ற நவீன சில்லறை விற்பனை வடிவங்கள், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள், இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் போன்ற குயிக்-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் நரசுஸ் காபி விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, உணவகங்கள், கஃபேக் களுக்கும் நரசுஸ் காபி சப்ளை செய்யப்படுகிறது. டெல்லி, மும்பை போன்ற பெரு நகரச் சந்தைகளில் நரசுஸ் விற்பனை அதிகரித்துள்ளது தற்போதைய மகிழ்ச்சியான செய்தி!” என்று விவரித்தார் நரசுஸ் காபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ருதீப்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு, குஷால்நகர், கேரளாவின் வயநாடு, தென்னிந்தியாவின் முக்கியப் பகுதிகளான ஏற்காடு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் வியட்நாம், ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் காபிக்கொட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு, சேலம் மற்றும் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள வீராணம் ஆகிய இரு இடங்களில் உள்ள ஆலைகளில் நரசுஸ் காபி தயாராகிறது.

தமிழ்நாட்டில் காபிச் சந்தையில் 40 சதவிகித இடத்தைத் தக்க வைத்துள்ளது நரசுஸ் காபி நிறுவனம். 2025-26-ல் ரூ.641 கோடிக்கு வர்த்தகம் செய்து, தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து ரூ.1000 கோடி வர்த்தகம் என்ற இலக்கை நோக்கி வீறுநடை போடுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட 42 நாடுகளில் நரசுஸ் காபியின் ஆதிக்கம் பரவியுள்ளது.

‘காபின்னா நரசுஸ் காபிதான்! பேஷ், பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு என்னும் நடிகர் உசிலைமணியின் விளம்பர வாசகம் பல தசாப்தங்கள் தாண்டி, இன்றைக்கும் வாடிக்கை யாளர்களால் ரசனையோடு நினைவுகூரப்படுகிறது. நரசுஸ் காபியின் குறையாத தரமே இந்த ‘பேஷ்… பேஷ்…’ என்கிற பாராட்டு மழையின் அடிநாதம் என்கிறார்கள் நரசுஸ் காபி பிரியர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *