பைக்கில் சென்று சிங்கத்தை விரட்டிய வனத்துறை ஊழியர்கள் – குஜராத் வன விலங்குகள் சரணாலய வீடியோ வைரல்!

Spread the love

குஜராத் மாநிலம் அம்பார்டி மாவட்டத்தில் தாரி கிர் கிழக்கு பிரிவில் சிங்கம் சரணாலயம் ஒன்று இருக்கிறது. இங்கு பார்வையாளர்கள் மூடப்பட்ட வாகனங்களில் சென்று சிங்கங்களை நேரில் பார்வையிட முடியும். இந்த சிங்கம் சஃபாரியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி இருக்கிறது. அதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் சிங்கத்தைத் துரத்துவது தெரிகிறது. ஒருவரிடம் வாக்கி-டாக்கி (walkie-talkie) இருப்பதைக் காண முடிகிறது. மேலும், வனத்துறைக்குச் சொந்தமான அரசு வாகனம் (Bolero) ஒன்றும் அந்தப் பகுதியில் சென்றது.

மூன்று வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் சிங்கத்தை விரட்டுவதை வீடியோவில் காட்டுகிறது. விசாரணையில் தீபாவளி விடுமுறையின் போது வருகை தரும் விஐபி விருந்தினர்களுக்கு சிங்கத்தை நெருக்கமாகப் பார்க்க ஏற்பாடு செய்ய வனத்துறை ஊழியர்கள் இது போன்று செயல்பட்டதாக கூறப்படுகிறது.

சிங்கம் பல திசைகளில் இருந்து துரத்தப்பட்ட பிறகு, பின்தொடர்பவர்கள் பின்னால் திரும்பி ஓடுவதையும் காட்சிகள் காட்டுகின்றன.

வீடியோ வைரலானதை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று வனத்துறை ஊழியர்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வனத்துறை தலைமை பாதுகாவலர் ஜெய்பால் சிங் கூறுகையில், “சம்பவம் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். சில வன ஊழியர்கள் மாலையில் சஃபாரி பூங்காவில் சிங்கத்தை விரட்டியுள்ளனர். இந்த வழக்கமான பயிற்சி ஜீப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் சில பணியாளர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட மூன்று வனத்துறை ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்”‘ என்றார். இதற்கிடையில் உதவி வனப் பாதுகாவலர் மிதேஷ் வானியா இது குறித்து கூறுகையில், இந்த வீடியோ தீபாவளி பண்டிகையின் போது எடுக்கப்பட்டது என்றும், அதே சமயம், சிங்கத்திற்குத் துன்புறுத்தல் ஏதும் இழைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சஃபாரி பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு, ‘கிரால்’ (kraal) என்று அழைக்கப்படும் வேலியிடப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் தினமும் உணவு வழங்கப்படுவதாக அவர் கூறினார். வீடியோவில் காணப்பட்ட சிங்கம் அந்த இடத்திலிருந்து வெளியேறியிருந்ததால், அதை மீண்டும் உள்ளே அழைத்துச் செல்ல ஊழியர்கள் முயன்றுள்ளனர். விலங்கிற்குத் துன்புறுத்தல் விளைவிக்கும் நோக்கம் ஏதும் இருக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *