இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓ.ம்’ திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தனுஷ், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவியுடன் இணைந்து பணியாற்றியது குறித்து பேசியிருக்கிறார்.

தனுஷ் பேசுகையில், “மம்மூட்டி சார் பற்றிப் பேசும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2002-ஆம் ஆண்டு நான் ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்தபோது, ஜாம்பவான் நாகேஷ் சாருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைத்தது.
அப்போது ஒருநாள் என்னை அழைத்த நாகேஷ் சார், ‘டேய், ஸ்பாட்டில் சிலர் பயங்கரமாக நடிப்பார்கள். பார்த்தாலே அவர்கள் நடிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அவர்களைப் பார்த்து நீ பயப்படவே வேண்டாம்.
ஆனால், சிலர் நடிப்பதே தெரியாது. சும்மா வந்து வசனம் பேசிவிட்டுப் போவது போல இருக்கும். அவர்களிடம்தான் நீ மிகவும் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு நடிகன் நடிப்பது வெளியே தெரியவே கூடாது. அவன்தான் சிறந்த நடிகன்’ என்று சொன்னார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி சாருடன் நடிக்கும்போது அந்த அறிவுரை எனக்குப் பேருதவியாக இருந்தது. மம்மூட்டி சார் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. மேலும், பாலுமகேந்திரா சார், மம்மூட்டி சாரைப் பற்றி என்னிடம் நிறையப் பேசியிருக்கிறார். அவர் உங்களை வைத்து ‘யாத்ரா’ என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துள்ளார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என் மகனுக்கு ‘யாத்ரா’ என்று பெயர் வைத்ததற்கு, அந்தத் திரைப்படத்தின் தலைப்புதான் ஒரு வகையில் தூண்டுதலாக இருந்தது.

இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தும், படத்தை முடித்துவிட்டுப் போகாமல் புரொமோஷனுக்காகச் சென்னை, ஹைதராபாத் எனப் பயணிப்பது வியக்க வைக்கிறது” என்றவர் சாய் பல்லவி குறித்து, “இந்தப் படத்தின் இரண்டாவது ஹீரோ சாய் பல்லவிதான். மம்மூட்டி சாரைப் போலவே அவரும் தனது கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியே வந்து, ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சாய் பல்லவி ஒரு இயற்கையின் குழந்தை. புட்டபர்த்தி சாய்பாபா அவர்களே தன் கையில் தூக்கிப் பெயர் வைத்த குழந்தை அவர். அதனால்தான் அவர் சாய் பல்லவி. அந்த ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்” எனப் பேசினார்.