தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியிருக்கிறது. அதே நேரம், வாக்குரிமையை நிறைவேற்ற தயாரான பெரும் திரளான மக்கள் கூட்டம் நேற்று இரவிலிருந்து அல்லோலப்பட்டு இருக்கிறது.
போதுமான பேருந்து வசதி, ரயில் வசதி இல்லாமல், வாகன நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி பயணத்தைத் தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நேற்று இரவு 8:20 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரவாயல், போரூர் டோல்கேட் வழியாக கிளாம்பக்கம் செல்லும் 101CT பேருந்தில் ஏறினேன். ஏறும்போது பேருந்து நிரம்பி வழிந்தது.
தொடர்ந்து 3 பேருந்துகள் தானியங்கி கதவைத் திறக்காமல் சென்றதால், கிடைத்த பேருந்தில் சென்றுவிடலாம் என்றே பலரும் பேருந்தில் ஏறினார்கள்.

ஆனால், மதுரவாயலை பேருந்து கடக்கும்போது மணி இரவு 10. ஏற்கெனவே பேருந்து கொள்ளளவை மீறி சுமந்திருக்கும் நிலையில், தொடர்ந்து நிறுத்தங்களில் மக்களை ஏற்றுவதில் தீவிரமாக இருந்தார் நடந்துனர்.
ஒருகட்டத்தில் பயணிகள், “ஏற்கெனவே மூச்சுவிட முடியல… வயசானவங்க மயக்கம் வருதுன்னு சொல்றாங்க… குழந்தைங்க வாந்தி எடுத்துட்டு இருக்கு… இதுல நீ இன்னும் ஆட்களை ஏத்தி எங்களைக் கொல்லபோறியா?’ எனக் கடுமையான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார்கள்.
போரூர் டோல்கெட்டில் சுமார் 2 கி.மீ., தூரம் ஆட்கள் பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். இந்தப் பேருந்து வந்ததும் அந்தக் கூட்டம் பேருந்தை மொய்த்துக்கொண்டது. உள்ளிருந்து கதவைத் திறக்க எதிர்ப்பும் வெளியிலிருந்து ‘கதவைத் திற’ என்ற கோபத்துக்கு மத்தியில் நடந்துனர் விழிபிதுங்கி நின்றார். ஒருவழியாக சிலரை மட்டும் பேருந்தில் ஏற்றிக்கொண்டு பேருந்து நகர்ந்தது.