Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்… நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

Spread the love

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருடம் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெப்பத்தைத் தணிக்க என்ன செய்தாலும் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில் எண்ணெய்க் குளியல் உதவுமா… குறிப்பாக, நல்லெண்ணெய் வைத்துக் குளிக்கலாமா…. நல்லெண்ணெயை அப்படியே தலையில் தேய்த்துக் குளிப்பது சரியா அல்லது சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

நல்லெண்ணெயைப் பயன்படுத்தி எண்ணெய்க் குளியல் (நெய் குளியல்) எடுக்கும்போது, அதனை கண்டிப்பாகச் சூடுபடுத்தித்தான் பயன்படுத்த வேண்டும். வெயில் காலமாக இருந்தாலும்கூட, எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.

குளிர் காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயை லேசாகச் சூடாக்கிப் பயன்படுத்துவது மிக அவசியம். ஏனெனில் அது தரும் குளிர்ச்சியை ஈடுகட்ட நிச்சயம் அப்படிச் செய்தாக வேண்டும். எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயுடன் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு போன்றவற்றைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அதுதான் முறையான எண்ணெய்க் குளியலுக்கான அடிப்படையும்கூட.

புதிதாக எண்ணெய்க் குளியல் எடுக்கத் தொடங்குபவர்கள், அப்படியே எண்ணெயைத் தேய்த்துக் குளித்தால் சளிப் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் எண்ணெயைச் சூடுபடுத்திப் பயன்படுத்துமாறு சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்.

எண்ணெய் குளியல்

எண்ணெயைச் சூடுபடுத்தித் தேய்ப்பது உடலுக்கு இதத்தைத் தரும். உச்சந்தலையில் எண்ணெய் தேய்க்கும்போது, அந்தச் சூடு உடலின் வர்ம புள்ளிகளைத் தூண்டும் என்ற சித்த மருத்துவக் கருத்தின் அடிப்படையில் இப்படிச் சொல்லப்படுகிறது.

அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு அரை மணி நேர இடைவெளி விட்டு நீராடுவதே எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதற்கான சரியான வழிமுறை. அதிகாலையில் முடியவில்லை எனில் காலை ஆறு மணி வாக்கில் எண்ணெய்க் குளியலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *