Tamilnadu
oi-Vignesh Selvaraj
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார கட்டணம் 3 மடங்கு உயர்ந்த நிலையில், மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என்றும் அறிவித்தார். 500 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு முன்பு போலவே 100 யூனிட் மட்டும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வீட்டு நுகர்வோருக்கான மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். முந்தைய மாதங்களை விட 2 மடங்கு, 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணம் வந்துள்ளதாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மாதத்திற்கான மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோருக்கு மின்சார கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏசி, ஃப்ரிட்ஜ் வசதியில்லாத வீடுகளில் கூட ரூபாய் 6,000 வரை மின் கட்டணம் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் 247 பேருக்கு குறைந்தபட்சமாக ரூ.2000 முதல் ரூ.6,100 வரை மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை மின் கட்டணம் ரூபாய் 841 செலுத்திய நிலையில் இந்த மாதம் அவர்களுக்கு 6,166 ஆக உயர்ந்து வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது 3 மடங்கு மின் கட்டணம் வந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம், பயன்படுத்திய யூனிட்களுக்கு முழுமையாக மின் கட்டணம் செலுத்தி விடுகிறோம், இலவச மின்சாரம் எனக் கூறி எங்கள் தலையில் அடிக்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் குமுறி உள்ளனர்.