போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு – வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்! | gold chain and mobile phone stolen from a policeman – vellore new bus stand

Spread the love

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திலுள்ள லத்தேரி பகுதிக்கு பேருந்து மூலம் பயணித்து வந்திருந்தார். தொடர்ந்து, தனது பிறந்த நாளையும் அங்கேயே கொண்டாடியிருக்கிறார். இதையடுத்து, செங்கல்பட்டு செல்வதற்காக இரவு 11.30 மணியளவில், வேலூர் புதிய பேருந்து நிலையம் சென்றார். பேருந்துக்காக வெகுநேரம் காத்திருந்த அக்‌ஷய்பிரதீப், பயணிகள் அறையில் அமர்ந்தபடி தூங்கிவிட்டார்.

சிறிதுநேரத்தில் விழித்து பார்த்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயின், பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவை திருடுபோய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து, உடனடியாக வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தார். போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் பயணிகள் அறையில் இருந்து வேக வேகமாக வெளியேறிய இளைஞனை அடையாளம் கண்டனர். விசாரணையில், வேலூர் கொணவட்டம் திடீர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (28) எனத் தெரியவந்தது.

நேற்றைய தினம், மணிகண்டனை தேடிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்கசெயின், பணம், செல்போன் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட மணிகண்டன் வேறு ஏதேனும் குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகம் – ஆந்திர மாநிலங்களை இணைக்கும் முக்கிய நகரமாக வேலூர் இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்பவர்களும், ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். எந்நேரமும், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கூட்டமிருப்பதால், திருடர்கள் கைவரிசையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், ஒரு காவலரிடமே திருடப்பட்டிருப்பது, பயணிகளின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. எனவே, புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *