போலீஸ் ரெய்டு: குக்கரில் சாதத்துடன் கஞ்சாவை அவித்த இளைஞர் – காட்டிக்கொடுத்த விசில்!

Spread the love

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக ‘ஆப்ரேஷன் தூஃபான்’ செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தற்போது என்னச் செய்கிறார்கள் என கண்காணிக்கும்படி திருச்சூர் சிட்டி போலீஸ் கமிஷனர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் உத்தரவிட்டிருந்தார்.

போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது என்ன வேலை செய்கிறார்கள், அவர்கள் கேரளத்துக்கு வெளியே பயணம் செய்கிறார்களா என்பது போன்ற பல விபரங்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்.

அந்த வகையில், திருச்சூர் குன்னங்குளம் அருகே உள்ள அடுப்புட்டி பகுதியைச் சேர்ந்தவர் பினீஷ் (40) என்பவரையும் போலீஸார் கண்காணித்து வந்தனர். இவர் போதைப்பொருள் வழக்கு மற்றும் மதுவிலக்கு போலீஸாரை கத்தியைக்காட்டி மிரட்டிய வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.

பினீசை கண்காணித்ததில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக குன்னங்குளம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பினீஷின் வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பினீஷ்

பினீசின் வீட்டுக்கு உள்ளேயும், வெளிப்பகுதியிலும் தேடியும் கஞ்சா கிடைக்கவில்லை. ஆனால், அவர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் உறுதியானது என்பதால் போலீஸார் அவரை வீட்டுக்குள் வைத்தே விசாரணை நடத்தினர். வீட்டில் கஞ்சா இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார் பினீஷ். 

அந்த சமயத்தில், சமையல் அறையில் திடீரென குக்கர் விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, வீடு முழுவதும் கஞ்சா வாசனை பரவியது. குக்கரில் என்ன சமைக்கிறாய் என போலீஸார் கேட்டதற்கு, சாதம் வைப்பதாக சொன்னார் பினீஷ்.

சந்தேகம் அடைந்த போலீஸார் சமையல் அறைக்குச் சென்று, அடுப்பை அணைத்ததுடன் குக்கரை கீழே இறக்கினர். குக்கரில் உள்ள நீராவி முழுவதையும் வெளியேற்றிவிட்டு திறந்து பார்த்தனர். குக்கர் நிறைய சாதம் வெந்த நிலையில் இருந்தது.

சந்தேகத்தின்பேரில் சாதத்தை கைகளில் அள்ளியபோது, உள்ளே பிளாஸ்டிக் கவர் ஒன்று தட்டுப்பட்டது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது, 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

குக்கரில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா பொட்டலம்

குக்கருக்குள் கஞ்சா சென்றது எப்படி என பினீசிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு பினீஷ், “போலீஸ் வருவது தெரிந்ததும் கஞ்சாவை எங்கு மறைத்து சைப்பது என தெரியவில்லை. குக்கரில் சாதம் வைக்க அரிசி போட்டிருந்தேன். திடீரென யோசனை தோன்றியதால், கஞ்சா பொட்டலத்தை குக்கருக்குள் போட்டு மூடி வைத்துவிட்டேன். குக்கர் விசில் அடித்ததால் கஞ்சா வாசனை வெளியறிது. அதனால், நான் சிக்கிவிட்டேன்” என்றார் அப்பாவியாக.

இதையடுத்து கஞ்சா விற்பனை வழக்கில் பினீஷ் கைதுசெய்யப்பட்டார். அரைக் கிலோவுக்கும் கீழ் கஞ்சா பிடிக்கப்பட்டதால் சட்ட நடவடிக்கைகளுக்குப்பின் பினீஷ் ஜாமினில் விடுவிக்கப்பாட்டார். போலீஸை கண்டதும் கஞ்சாவை குக்கரில் சாதத்துடன் வேகவைத்த இளைஞரின் செயலும், குக்கர் விசிலடித்ததால் அவர் மாட்டிக்கொண்டதும் சினிமா காமெடியை விஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *