`ஒரு வாரமா தூக்கமில்ல’- தொடர் மின் வெட்டு; தலையணையுடன் மின்சார அலுவலத்தில் தூங்கச் சென்ற மும்பை பெண் | navi-mumbai-woman-pillow-protest-power-cut

Spread the love

மும்பையில் பருவமழை தொடங்குவதில் தாமதமாகி வருகிறது. அதேசமயம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் மின் தேவை அதிகரித்து அடிக்கடி மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் உறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை பகுதியில் அதிக அளவில் மின்வெட்டு நிலவுகிறது. நவிமும்பையில் உள்ள உல்வே 8வது செக்டரில் வசிக்கும் நிதர்ஷனா என்ற பெண், மின் வெட்டு பிரச்னையால் ஒரு வாரமாக இரவில் தூக்க முடியவில்லை என்று புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக அப்பெண் நேரடியாக உள்ளூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கே சென்று பல முறை புகார் செய்தார். அப்படி இருந்தும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து அப்பெண் தலையணையுடன் மின்சார அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

அதோடு அங்கு மின்சாரம் இருப்பதால் அங்கு உறங்க இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டது, அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்படி வாக்குவாதம் செய்தபோது அவர் அழுதுகொண்டே, “ஒருவாரமாக இரவில் சரியாக தூங்கவில்லை…” என்று கூறும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி இருக்கிறது. நள்ளிரவில் துண்டிக்கப்படும் மின்சாரம் அதிகாலை வரை வருவதில்லை என்றும் அவர் அழுதுகொண்டே தெரிவித்தார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், “‘வழக்கமாக இரவு 11 மணியளவில் வேலையிலிருந்து வீடு திரும்புவேன். மின்சாரம் இல்லாமல் வெப்பம் மற்றும் அசௌகரியத்துடன் இரவைக் கழிக்கவேண்டியிருக்கிறது.

மீண்டும் காலை 6 மணியளவில் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், மிகவும் சோர்வாகி விடுகிறது. நான் ஒரு வாரமாக சரியாகத் தூங்கவில்லை. தொடர்ந்து மின் வெட்டுகளைச் சமாளிக்க முடியவில்லை. மின் விநியோகத்திற்கு பொறுப்பானவர்கள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் வித்தியாசமான இந்த எதிர்ப்பு சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தது. பல குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் ஒரு சிக்கலை முன்னிலைப்படுத்தியதாக, நெட்டிசன்கள் அவரைப் பாராட்டினர். அதிகாரிகள் மின்வெட்டுப் பிரச்னைக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *