போலீஸ் விசாரணை முடிவு… செய்தியாளர்களிடம் பேச மறுத்த செந்தில் பாலாஜி… – Kumudam

Spread the love

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் இன்று சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவுக்கு, சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரின் பெயரும் வழக்கில் இணைக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

அதன்படி நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமார், இன்று முதல் முறையாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். தொடர்ந்து செந்தில்பாலாஜியிடம் போலீசார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த செந்தில்பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “செய்தியாளர்களிடம் பிறகு பேசுகிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *