நாட்டின் மக்கள்தொகையில் பாதியளவு கொண்ட பெண்களை உள்ளடக்கிய, தேசத்தைக் கட்டமைக்கும் இத்தகைய ஒரு முக்கியச் செயல்பாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பது, நாம் அனைவரும் பெற்ற பெரும் பேறு என்று நான் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம், இந்த முக்கிய வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது. இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டிற்கு ஒரு புதிய திசையை வழங்கப் போகிறோம். நமது ஆட்சி நிர்வாக அமைப்பில் உணர்வுபூர்வமான அணுகுமுறையை ஊடுருவச் செய்ய, நாம் ஓர் அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்ளப் போகிறோம். இது நாட்டின் அரசியலை வடிவமைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலத் திசையையும் அதன் நிலையையும் தீர்மானிப்பதாகவும் அமையும்.
21-ம் நூற்றாண்டில், இந்தியா ஒரு புதிய தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்கிறது. இன்றைய உலகில் இந்தியாவின் ஏற்புடைமையை நாம் அனைவரும் உணர்கிறோம். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒரு தருணமாகும். ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) என்பது வெறும் ரயில்வே, சாலைகள், உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மற்றும் வளர்ச்சி சார்ந்த புள்ளிவிவரங்களை மட்டுமே குறிப்பதல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘விக்சித் பாரத்’ குறித்து அத்தகைய குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள் நாம் அல்ல. கொள்கை உருவாக்கமானது, ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (அனைவருடனும், அனைவருக்கும் வளர்ச்சி) எனும் மந்திரத்தை உண்மையாகவே பிரதிபலிக்கும் ஒரு ‘விக்சித் பாரதத்தையே’ நாம் விரும்புகிறோம். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் கொள்கை உருவாக்கத்தில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.
நாம் ஏற்கெனவே இதில் காலதாமதம் செய்துவிட்டோம். அதற்கான காரணங்கள் எவையாக இருப்பினும், அதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருப்பினும், இந்த எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இந்தச் செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டன என்பது எனக்குத் தெரியும். ஒரே ஒரு கட்சியைத் தவிர, நாங்கள் சந்தித்த மற்ற அனைவரும் கொள்கைரீதியான எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அதன் பிறகு என்ன நடந்திருந்தாலும், தற்போது ஓர் அரசியல்ரீதியான திசைவழியை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே சிந்திப்பவர்களுக்கு நான் ஓர் அறிவுரையையும் வழங்க விரும்புகிறேன். நம் நாட்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதம் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு உரித்தான இந்த இட ஒதுக்கீட்டு உரிமையை எதிர்த்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களை இந்நாட்டுப் பெண்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டார்.