
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மிக முக்கிய திட்டமாகும். சொல்லப்போனால், 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைப்பதற்கு இந்த திட்டமே பிரதானமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை பெற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந் நிலையில், தேர்தலின் போது முதல்வராக இருந்த ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தொகை ரூ 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார். அது போல் தவெக தலைவர் விஜய்யும், தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் ரூ 2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார்.
அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றிப் பெற்று, கூட்டணி ஆட்சியை அமைத்தது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோது அவர் போடும் முதல் கையெழுத்து மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு தொடர்பாகத்தான் இருக்கப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்துவருகிறது. இதற்கிடையில், ஏற்கனவே வழங்கப்பட்டு கொண்டிருந்த 1000 ரூபாயாவது வழங்குவார்கள் என்றிருந்த நிலையில், தாமதமாகத்தான் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பயனாளிகளின் அக்கவுண்டிற்கு வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.2500-ஆக விஜய் எப்போதுதான் உயர்த்தி வழங்குவார்? அதுதொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் விளக்கும் ஒன்றை கொடுத்துள்ளார்.
புதுச்சேரி கூடைப்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனாவும், மரியவில்சனும் பங்கேற்றிருந்தனர்.
பரிசளிப்பு விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், புதுச்சேரி தனது பிறந்த ஊர் என்று கூறிய அவர், இந்த நிகழ்வு பழைய நினைவுகளைக் கிளர்த்துவதாகக் கூறினார்.
அமைச்சராக அவர் தான் கலந்து கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ விழா இது என்பதால், அவரிடம் நிதித்துறை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் இந்த வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். அதோடு திருத்திய பட்ஜெட்டும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் குறித்துக் கேட்டபோது, மாநிலத்தின் உண்மையான நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இத்திட்டம் குறித்து முதலமைச்சர் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், வெள்ளை அறிக்கை 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் கூறியுள்ளதால், அதன் பிறகே ரூ. 2500 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.