மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் 75 சதவிகித பகுதிகளை அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. உடனடியாக விவசாயிகளுக்கு உதவ நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து உடனடியாக மத்திய குழு மகாராஷ்டிரா முழுவதும் வறட்சி பகுதிகளை பார்வையிட்டு இழப்பை மதிப்பீடு செய்து வருகிறது.
பழ விவசாயிகள் உட்பட மகாராஷ்டிராவின் விவசாயிகள், மிகவும் மோசமான வறட்சியை எதிர்கொள்கின்றனர். 1972 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியை விட தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மோசமானது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மூன்று தொடர்ச்சியான மோசமான பருவமழைகள் மகாராஷ்டிராவை இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டன. மோசமான மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா முழுவதும் பயிர்களை அழித்துவிட்டது.

இதனால் விவசாயிகள் மற்றும் பழ உற்பத்தியாளர்கள் தங்கள் மரங்கள் மற்றும் கொடிகளை உயிருடன் வைத்திருப்பதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். இந்த பழ மரங்கள் இறந்துவிட்டால், புதிதாக பயிரிடப்பட்ட பழத்தோட்டங்கள் பலனளிக்கத் தொடங்குவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.
இந்தியாவின் ஒயின் உற்பத்தியின் இதயமாக கருதப்படும் மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் உள்ள திராட்சை கொடிகள் தண்ணீர் இல்லாமல் காயத்தொடங்கியுள்ளன. கிணறுகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் வறண்டு கிடப்பதால், மாதுளை, வாழை, மா பயிரிடும் விவசாயிகள் தண்ணீருக்காக தத்தளித்து வருகின்றனர். இந்த ஆண்டு தற்போது பெரும்பாலான பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டன. திராட்சைத் தோட்டங்களில் அக்டோபர் ஒரு முக்கியமான காலமாகும். கொடிகள் இந்த நேரத்தில் [அக்டோபரில்] கத்தரித்து விடப்படுகிறது. இதன் மூலம் மார்ச் மற்றும் ஏப்ரல் வரை [அடுத்த ஆண்டு] திராட்சைகளை உற்பத்தி செய்யும்.
தற்போது பழங்களை கொடுக்கக்கூடிய மரங்கள் மற்றும் கொடிகளை காப்பாற்றுவதே விவசாயிகளின் முன்னுரிமையாக இருக்கிறது. அவை இறந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும். இது குறித்து மகாராஷ்டிரா திராட்சை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கைலாஸ் போசலே கூறுகையில், ”தண்ணீரின்றி விவசாயிகள் சாதாரண திராட்சைத் தோட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இரண்டு மாதங்களாக மழை பெய்யவில்லை. விவசாயம் மற்றும் தோட்டக்கலைக்கு தண்ணீர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் குறைந்த பட்சம் கொடிகளை உயிருடன் வைத்திருக்க அரசு ரயில் டேங்கர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 358 தாலுகாக்களில் 265 தாலுகாக்களை வறட்சி பாதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மராத்வாடா மற்றும் விதர்பா ஆகியவை மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். மகாராஷ்டிரா மாநிலம் தோட்டக்கலையில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் திராட்சை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்கிருந்து மாதுளை மற்றும் வாழைப்பழங்களை உற்பத்தி செய்து பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற்து. 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் திராட்சை உற்பத்தியில் 69% க்கும் அதிகமான பங்கு மகாராஷ்டிராவில் மட்டுமே உள்ளது என்று மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாசிக் மட்டுமல்லாது, சாங்லி, சோலாப்பூர் மற்றும் புனே ஆகியவை பழங்கள் விளையும் பகுதிகளாகும்.
இங்கிருந்து நெதர்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு 2025-26 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட $368 மில்லியன் மதிப்புள்ள 2.24 லட்சம் டன் திராட்சைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. வறட்சி திராட்சை விளையும் பகுதி மட்டுமல்லாது மற்ற பழங்கள் வளரும் பகுதிகளிலும் பரவுகிறது. மா, மாதுளை மற்றும் வாழை விவசாயிகளும் வறட்சி காரணமாக பல ஆண்டுகளாக முதலீடு செய்த தோட்டங்களை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
5000 ஹெக்டேர் மரங்கள் அழிப்பு
மகாராஷ்டிராவின் ஆரஞ்சு பழம் விளையும் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமராவதியில் உள்ள ஆரஞ்சு பழத்தோட்டங்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது. அங்கு 5,000 ஹெக்டேர் பரப்பளவில் ஆரஞ்ச் மரங்கள் வெட்டப்பட்டதாகவும், எஞ்சியிருக்கும் பழத்தோட்டங்களில் பூப்பூப்பது, அவற்றின் வளர்ச்சி மற்றும் பழங்களின் அளவு ஆகியவற்றில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் 30 சதவீதம் தான் விளைச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் 2024-25ம் ஆண்டு நிலவரப்படி மாம்பழம் சுமார் 1.67 லட்சம் ஹெக்டேரும், வாழை 1.41 லட்சம் ஹெக்டேரும், திராட்சை 1.19 லட்சம் ஹெக்டேரும், மாதுளை 1.07 லட்சம் ஹெக்டேரும் பயிரிடப்பட்டுள்ளது.
மாதுளை சோலாப்பூர், அஹல்யாநகர், புனே மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அதிகம் விவசாயம் செய்யப்படுகிறது. கொங்கன் பகுதியில் அல்போன்சா மாம்பழமும், ஜல்காவில் வாழைப்பழமும் பயிரிடப்படுகிறது. இப்போது அடுத்து வரும் வறட்சியை சமாளிக்கவும், பயிர்களை உயிரோடு வைத்திருக்கவும், அரசு தண்ணீர் ரயில்களை இயக்கவேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில விவசாயிகள் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் செலவு செய்து டேங்கர் தண்ணீர் வாங்கி தங்களது பழ செடிகளை பாதுகாத்து வருகின்றனர்.