மகாராஷ்டிரா TET வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து; "இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயல்"- ராகுல்

Spread the love

மகாராஷ்டிராவில் இன்று (ஜூன் 28) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), வினாத்தாள் கசிவு காரணமாக அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தானே பகுதியில் சில நபர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய செய்தி கிடைத்தது.

இதன் அடிப்படையில், சனிக்கிழமை அதிகாலையிலேயே பிவாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

சந்தேகம் எழுந்த ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த ரெய்டில், சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மகாராஷ்டிரா மாநில தேர்வு கவுன்சில் உயர் அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட தாள்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, அசல் வினாத்தாளில் இடம்பெறவிருந்த பல கேள்விகள், அங்கு சிக்கிய தாள்களிலும் அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த ராஜீவ் ஷா, ஆகாஷ் குமார் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த தீரஜ் குமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், முறைகேடு உறுதியானதால் இன்றைய தேர்வை ரத்து செய்வதாக தேர்வு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு நீட் வினாத்தாள் கசிவு ஆனதால் மறுதேர்வு வைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு. மீண்டும் ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முறை, மகாராஷ்டிராவின் TET தேர்வு.

நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையானது ஒட்டுமொத்தமாக ஒரு ‘சுரண்டல் அமைப்பாக’ மாற்றப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒவ்வொரு இளைஞரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பற்றதாக மாற்றியிருக்கிறது.

இது வெறும் வினாத்தாள் கசிவு மட்டுமல்ல, நம் இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயலாகும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *