மகாளய பட்ச 15 நாட்களும் மறக்காதீங்க…முன்னோர் ஆசி பெற இந்த பரிகாரம் செய்யுங்கள்! – Kumudam

Spread the love

பலன் தரும் பரிகாரம் : – வி.ராம்ஜி

மகாளய அமாவாசைக்கு முன்னதாக வரும் காலகட்டங்களில் பதினைந்து நாட்களும் நாம் நம் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்ளலாம். நம் முன்னோர்கள் மட்டுமா? இறந்த நம் மூதாதையருக்கு மட்டுமின்றி, நம் மனதுக்குப் பிடித்தவர்கள் யார் இறந்திருந்தாலும் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். 

வருடத்தில் மூன்று அமாவாசைகள் முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இதில் புரட்டாசி அமாவாசை ரொம்பவே ஸ்பெஷல். மகாளய பட்சம் என்று சொல்லப்படும் புரட்டாசியின் மகாளய பட்ச பதினைந்து நாட்களும் முன்னோர்களுக்கான நாட்கள். எனவே இந்த நாட்களில், முன்னோர்கள் நம் வீட்டுக்கு வந்து பார்ப்பார்கள். நமக்கு ஆசி வழங்குவார்கள். நம் குடும்பத்தில் சுபிட்சத்தைத் தருவார்கள்! .

பொதுவாக அமாவாசை முதலான நாட்களில், நம் முன்னோர்களுக்குத்தான், இறந்துவிட்ட நம் முந்தைய பரம்பரையினருக்குத்தான் தர்ப்பணம் செய்வோம். பித்ருக் கடன் தீர்ப்போம். ஆனால் இந்த மகாளய பட்ச காலகட்டத்தில், முன்னோர்களுக்கு மட்டுமின்றி, நமக்குத் தெரிந்து இறந்தவர்களுக்கு அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கலாம். அதாவது, நம் தாத்தா, பெரிய தாத்தா, அப்பா, பாட்டி, பெரிய பாட்டி, அம்மா என்பவர்களையும் கடந்து, நம் சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, இறந்த நம் ஆசிரியர்கள், நண்பர்கள், மகான்கள், அவ்வளவு ஏன்… நம் வீட்டுச் செல்லப்பிராணிகள் இறந்துவிட்டிருந்தாலும் கூட, அந்த ஆத்மாவுக்காகவும் கூட எள்ளும் தண்ணீரும் விட்டு, தர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். .

இறந்தவர்கள் எவருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். நம் முன்னோரின் ஆசியும் இறந்துவிட்ட நமக்குத் தெரிந்த, விருப்பமானவர்களின் ஆசியும் கிடைக்கும். மகாளயபட்சம் எனும் பதினைந்துநாட்களில், நம்மால் இயன்ற உதவிகளை, தர்மங்களைச் செய்யலாம். பசுக்களுக்கு அகத்திக்கீரையும் பழங்களும் வழங்கலாம்! நாம் செய்யும் தானம், மூன்று மடங்காக, ஆசியாகவும் அருளாகவும் நம்மை வந்துசேரும் என்பது ஐதீகம்! 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *